கொரோனா இரண்டாம் அலை சூறாவளியாய் சுழன்று நாடு முழுவதும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பாதிப்பு சற்றே குறைந்தாலும், கோவை மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாகவே உள்ளது. திரும்பிய பக்கமெல்லாம் ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் மின்மயானத்துக்கான கோரிக்கைகள் காணப்படுகின்றன.
Also Read: மாறுபடும் மத்திய, மாநில அரசுகள் கணக்கு! - தொடரும் கோவை தடுப்பூசி சர்ச்சை
கணவனை இழந்த மனைவி, பெற்றோரை இழந்த குழந்தைகள், வாரிசை இழந்த பெற்றோர் என்று பேரிழப்புகளை சந்தித்து வருகிறோம்.தந்தை, தாய் அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர்.
இதனிடையே, கொரோனா தொற்றால் பெற்றோர் சிகிச்சை பெற்று வரும்பட்சத்தில், அந்த குழந்தைகளுக்கு பாதுகாவலர் இல்லையெனில், அவர்கள் தங்குவதற்கு கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் மூன்று காப்பகங்கள் இயங்கி வருகின்றன.
கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 850 குடும்பங்களை ஆய்வு செய்ததில், 61 குடும்பங்களில் 91 குழந்தைகள் தாய், அல்லது தந்தையை இழந்துள்ளனர். இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றோர் இருவரையும் இழந்துள்ளனர்.
இவர்களுக்கு உரிய பாதுகாப்பு, உணவு, நிரந்தர தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு தாய் அல்லது தந்தையை இழந்தால் மூன்று லட்ச ரூபாய், இருவரையும் இழந்தால் ஐந்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதில் 61 குழந்தைகள் நிதியுதவி கேட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் பாதுகாவலரின் பொறுப்பில் இருக்கும் குழந்தைகள் 20 பேருக்கு மட்டும், தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக நான்கு மாதங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுந்தர் கூறுகையில், “குழந்தைகளின் தாய், தந்தையில் ஒருவரோ, அல்லது இருவருமே இறந்தால், அவர்களின் பாதுகாப்புக்கு யாரும் இல்லையெனில் கவலைப்பட வேண்டாம்.
1098 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். அரசு சார்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uODixq
via
