பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம், வடக்கு முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி (69). கோ-ஆப்டெக்ஸில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி பிச்சையம்மாள் (61). இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது. மகன் முருகானந்தம் ஊட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் ராமசாமிக்கு உடல்நிலை குறைபாடு ஏற்படவே தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராமசாமிக்கும், அவர் மனைவி பிச்சையம்மாளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து இருவருக்கும் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி ராமசாமி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மகன் முருகானந்தத்திடம் ஒப்படைத்தனர். பின்னர் முருகானந்தம், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பிச்சையம்மாள் இருவரும் ஆம்புலன்ஸ் மூலம், ராமசாமி உடலை தங்களது வீட்டுக்குக் கொண்டு வந்தனர். மேலும் கொரோனாவால் இறந்ததை ஊர் மக்களிடம் மறைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைத்தனர்.
அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை, கண்ணாடிப் பெட்டியில் உடலை வைத்திருந்தனர். தப்பாட்டம் மற்றும் மேள தாளங்கள் முழங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். கொரோனா விதிமுறையை மீறி கிட்டத்தட்ட 12 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த ராமசாமியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். இதற்காக பெரும் கூட்டம் கூடியது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிச்சையம்மாளும் உறவினர்களைக் கட்டிப்பிடித்து கதறி அழுது கணவர் இறந்த துக்கத்தினை வெளிப்படுத்தினார்.
பின்னர், ராமசாமி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விஷயம் வி.ஏ.ஓ. சிவப்பிரகாசம் மூலம் கிராமத்தினருக்கும் உறவினர்களுக்கும் தெரியவர, பெரும் பதற்றமடைந்தனர். இதுகுறித்து முருகானந்தத்திடம் கேட்டபோது, தன் தந்தை கெரோனாவால் இறந்ததை ஒப்புக்கொள்ள, அனைவரும் பீதியடைந்தனர். இந்தத் தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாரின் கவனத்திற்கும் சென்றது.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டது. இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து சிலரிடம் பேசினோம். ``கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கொரோனாவால் இறந்தவர்களின் உடலை இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்காமல் நேரடியாக அடக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் முருகானந்தமும் அவரின் அம்மாவும் அதை மறைத்து இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை நடத்தி ஊரையே பரபரப்புக்குள்ளாக்கிவிட்டனர். இதுகுறித்து வி.ஏ.ஓ கொடுத்த புகாரின் பேரில், கபிஸ்தலம் போலீசார் பிச்சையம்மாள் மற்றும் முருகனாந்தம் மீது அரசு உத்தரவை கடைப்பிடிக்காமல் மீறி செயல்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்ததுடன் அது குறித்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்'' என்றனர்.
இதேபோல பாபநாசம் அருகே உள்ள இலுப்பகோரை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ் (60). கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 29-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியாமல், இறந்தவரின் சகோதரர் உதயசூரியகுமார், உறவினர்கள் கண்ணன், கலியமூர்த்தி ஆகிய மூவரும் சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றதுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாகக் கூறி வீட்டில் வைத்து இறுதிச் சடங்குகளை செய்த பின்னர் அடக்கம் செய்தனர்.
ராஜேஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த தகவல் ஊர் முழுக்கப் பரவியதும் வீரமாங்குடி சுகாதார ஆய்வாளர் நாடிமுத்து, அய்யம்பேட்டை போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து உதயசூரியகுமார், கண்ணன், கலியமூர்த்தி ஆகிய மூன்று பேர் மீதும் அய்யபேட்டை போலீசார், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்களா எனச் சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டும் வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தோம்.
``கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதிலும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுக்குள் வர வேண்டும் என்றால் மக்களின் ஒத்துழைப்பு ரொம்பவே அவசியமானது. ஆனால் சிலர் அதனை கவனத்தில் கொள்ளாமல் தொற்றில் உயிரிழந்தவர்கள் உடலை அஞ்சலிக்காக வைத்து ஊரை திரட்டி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இனி யாரும் இதேபோன்று செயல்படாமல் இருக்க எச்சரிக்கை செய்யும் விதமாக அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது'' என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3z5q5Uj
via
