அசோக் செல்வனை வைத்து வெங்கட்பிரபு எடுக்கும் படம் `மன்மத லீலை' ரீமேக்கா... அதில் என்ன சிக்கல்?!

0
அசோக் செல்வன் நடிக்க வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் படம் கமல்ஹாசன் நடித்து எழுபதுகளில் வெளியாகி ஹிட் ஆன ’மன்மத லீலை’யின் கதைதான் என்றும், ‘மன்மத லீலை’யின் தயாரிப்பாளர்களிடம் எந்தவொரு அனுமதியும் வாங்காமல் வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருவதாகவும் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
Maanadu

இயக்குநர் வெங்கட்பிரபு, சிம்புவின் 'மாநாடு’ படத்துக்குப் பிறகு ’ராக்போர்ட் எண்டர்டெய்ன்மெண்ட்’ முருகானந்தம் தயாரிக்கும் படத்தை இயக்குவதாகச் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். இந்தப் படத்துக்கு அதிகாரபூர்வமாக இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. தற்போது இந்தப் படம் குறித்துத்தான் சர்ச்சை.

இவ்விவகாரம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சினிமா சோர்ஸ் ஒருவர் நம்மிடம் பேசினார்...

"கமல்ஹாசன், ஜெயப்பிரதா, ஒய்.விஜயா, ஆகியோர் நடிக்க இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கிய படம் 'மன்மத லீலை'. ’கவிதாலயா’ நிறுவப்படுவதற்கு முன் கே.பி.இயக்கிய மூன்று படங்களில் இதுவும் ஒன்று. படத்தைத் தயாரித்தது ‘கலாகேந்திரா’ நிறுவனம். படம் இந்தியிலும் தெலுங்கிலும் வெளியாகி அங்குமே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’வை இயக்குநர் பத்ரி இயக்க, வேந்தர் மூவிஸ் மதன் ரீமேக் செய்தபோதே, 'மன்மத லீலை’யும் ரீமேக் ஆகப்போவதாகச் செய்திகள் வெளியாகின. ('தில்லு முல்லு', 'மன்மத லீலை' இரண்டு படங்களூமே கலாகேந்திரா தயாரித்தவைதான்.)

தில்லு முல்லு

இயக்குநர் பத்ரியே அதே வேந்தர் மூவிஸுக்காக ’மன்மத லீலை’யையும் இயக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால், ’தில்லு முல்லு’ ரீமேக்கின் போது ரைட்ஸ் தொடர்பாக எழுந்த சில பிரச்னைகளால் ‘மன்மத லீலை’ அப்போதைக்கு கை விடப்பட்டதாம்.

இந்தச் சூழலில்தான் தற்போது வெங்கட்பிரபு ராக்போர்ட் என்டர்டெய்ன்மெண்டுக்காக இப்படத்தை இயக்கி வருகிறார். படக்குழு இன்னும் பெயர் சூட்டவில்லை என்றாலும், ’மன்மத லீலை’யின் கதைதான் என்கிற தகவல் பட யூனிட்டுக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவே தெரிய வந்துள்ளது" என்றார் அந்த சோர்ஸ்.

‘மன்மத லீலை’யின் தயாரிப்பாளரான ‘கலாகேந்திரா’ கோவிந்தராஜின் குடும்பத்தினருக்கும் இந்தத் தகவல் சென்று சேர்ந்துவிட்டதாம். ராக்போர்ட் முருகானந்தமோ அல்லது வெங்கட்பிரபு தரப்பிலிருந்தோ தொடர்பு கொள்வார்களென எதிர்பார்த்தார்களாம். ஆனால் இப்போதுவரை யாரும் தொடர்பு கொள்ளாததால், சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவிருக்கிறார்களாம்.

Ashok Selvan

இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்கத் தொடர்பு கொண்ட போது, அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை.

தயாரிப்பாளர் முருகானந்தத்திடம் கேட்டபோது, "அசோக் செல்வனை வைத்து நாங்க எடுக்கிற படத்தின் கதை புதுசு. இது எந்தப் படத்தின் ரீமேக்கோ அல்லது தழுவலோ இல்லை. படத்தின் டைட்டிலா ’மன்மத லீலை’னு வச்சா நல்லா இருக்கும்னு இயக்குநர் தரப்பு நினைச்சிருக்கலாம். அதுபத்தி படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளர்கள்கிட்டக் கூடப் பேசறதாகவும் சொன்னாங்க. அது எந்த நிலையில் இருக்குன்னு எனக்குத் தெரியலை’’ என்றார்.

’தில்லு முல்லு’ விவகாரமுமே முதலில் ’கலாகேந்திரா’ குடும்பத்தினருக்குத் தெரியாமலேதான் நடந்ததாகவும், 'தில்லு முல்லு 2' வெளியாக இருந்த கடைசி நேரத்தில்தான் விஷயம் தெரிந்து அவர்கள் தலையிட, செட்டில்மெண்ட் ஆனதாம்.

இந்தப் புதிய படம் ‘மன்மத லீலை 2’வா எனத் தெரியவில்லை, ஆனால், அதே 'தில்லு முல்லு'தான் மறுபடியும் அரங்கேறியிருப்பதாக பலர் செய்தி வாசிக்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/2Rj3keq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*