திருவாரூர் : ஏடிஎம்-மில் கொள்ளை மற்றும் கொலை; 4 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

0

திருவாரூர் மாவட்டம் கூடூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு நபர்களை, திருவாரூர் மாவட்ட காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளார்கள். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

Also Read: சென்னை: `ஏடிஎம் கொள்ளைக் கும்பலின் தலைவன் யார்?!’ - நடித்துக் காட்டியதை வீடியோ எடுத்த போலீஸ்

திருவாரூர் அருகே திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கூடூர் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 19.06.21 அன்று இரவு இரண்டு டூவீலர்களில் வந்த நான்கு மர்ம நபர்கள், இந்த ஏடிஎம் மிஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் சத்தம் கேட்டதால், எதிர் வீட்டில் வசிப்பவர், ஏடிஎம் மையம் செயல்படக்கூடிய கட்டடத்தின் உரிமையாளரான தமிழரசன் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்தார். மேலும் ரோந்து காவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால் அங்கு மக்கள் கூடியதால், கொல்ளையர்கள் நான்கு பேரும் டூ வீலர்களில் தப்பிச் செல்ல முயன்றனர். ரோந்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள், துரத்தி சென்றபோது, ஒருவன் மட்டும் பிடிபட்டான். மற்ற மூவரும் தப்பிச் சென்றனர். அடுத்த சிறிது நேரத்தில் மற்ற கொள்ளையர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து, தாக்குதல் நடத்தி, பிடிப்பட்ட மற்ற ஒரு கொள்ளையனை மீட்க முயற்சி செய்தனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

அப்போது, ஏடிஎம் மையத்தின் கட்டட உரிமையாளர் தமிழரசன் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். மார்பு பகுதியில் ஆழமான காயம் ஏற்பட்டு, இதயம் பாதிக்கபட்டதால், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். ஏடிஎம் கொள்ளை முயற்சி மற்றும் தமிழரசன் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட புள்ளமங்கலத்தைச் சேர்ந்த விஜய், பிரதாப், ஆகாஷ் மற்றும் லட்சுமாங்குடியைச் சேர்ந்த மதன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் காய்திரி கிருஷ்ணனுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், இந்த நான்கு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். அதனை தொடர்ந்து, இவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்ததாக, திருவாரூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தினேஷ்குமார் மற்றும் திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் பாராட்டு தெரிவித்தார். மேலும் இம்மாவட்டத்தில் குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்துள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fZXyaE
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*