நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அங்குள்ள மூன்று பலசரக்குக் கடைகள் ஒரு பெட்டிக் கடை, ஒரு நகைக்கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து இந்தத் துணிகரத் திருட்டு நடந்துள்ளது.
Also Read: மும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனங்களின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்!
கடைகளில் பணம் இல்லாததால் மொத்தம் ரூ.50,000 மதிப்பிலான ரொக்கப் பணத்தை மட்டுமே திருடனால் எடுக்க முடிந்துள்ளது. நகைக்கடையின் முன்பக்க ஷட்டரை உடைத்த திருடனால் அடுத்து இருந்த ஷட்டரை உடைக்க முடியவில்லை. அதனால் உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பின.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸரிடம் கேட்டதற்கு, “திசையன்விளை பகுதியில் இரவு 12 மணி முதல் 2.30 மணிக்குள் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதில் ஈடுபட்ட திருடன் கண்கள் மட்டுமே தெரியும் அளவுக்கு முகத்தை மூடியிருப்பதுடன், பெண்கள் அணியும் நைட்டியை அணிந்தபடி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
கடைகளின் உள்ளே இருக்கும் சி.சி.டி.வி-களை, பிளாஸ்டிக் பந்தை அறுத்து அதன் மூலம் காட்சிகள் பதிவாக முடியாதபடி அடைத்துள்ளான். கைரேகை தெரிந்துவிடக் கூடாது மற்றும் சத்தம் வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பூட்டை உடைக்கும்போது துணியால் சுற்றி அடித்து உடைத்துள்ளான்.
தனியாகத் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் திருடனுக்கு 35 வயது இருக்கும் எனக் கணிக்க முடிகிறது. அவனது அங்க அடையாளங்களை வைத்து அந்த மர்ம நபரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
திசையன்விளை பகுதியில் ஒரே நாளில் 5 கடைகளின் ஷட்டரை உடைத்து கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தொடர்பாக வணிகர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த துணிகர திருட்டில் ஈட்டுபட்ட திருடன் யார் என்பதைக் கண்டுபிடித்து விரைவாக கைது செய்ய வேண்டும் என வணிகர் சங்கத்தினர் போலீஸருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jvklMC
via
