கடத்தச் சொன்னவரின் பேரம்;கடத்திய அதிகாரியை கத்தியில் குத்திய கும்பல் -திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்

0

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சீர்காழியில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி வரும் இவர், கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி இரவு மன்னார்குடியில் உள்ள சவளக்காரன் பகுதியில் யாருமில்லாத இடத்தில் கத்திக் குத்து காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் கிடந்தார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீர்காழி பேருந்து நிலையத்தில் தன்னை ஒரு மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்றதாகவும், தன்னை கடத்த சொன்ன யாரோ ஒருவருக்கும், இந்த மர்ம கும்பலுக்கும் பண பேரத்தில் பிரச்னை ஏற்பட்டதால், அந்தக் கோபத்தில் தன்னை பயங்கரமாகத் தாக்கி, இந்த இடத்தில் வீசிவிட்டு சென்றதாகவும் காவல்துறையினரிடம் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இவரை கடத்தச் சொன்னது யாரேன கண்டுப்பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடத்தப்பட்ட ராஜேந்திரன்

Also Read: குழந்தையைத் தூக்கிய மனநலம் பாதித்த பெண்?! ‘கடத்தல்’ சந்தேகத்தால் அடித்த மக்கள்! ஆரணியில் பரபரப்பு

கடந்த ஆகஸ்டு 2-ம் தேதி, பேருந்து மூலம் மன்னார்குடியில் இருந்து சீர்காழி சென்ற ராஜேந்திரன் அங்குள்ள பேருந்து நிலையத்தில் இறங்கியிருக்கிறார். அப்போது அங்கு இவருக்காக காத்திருந்த மர்ம கும்பல் இவரை காரில் வலுக்கட்டாயமாக ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளது. அன்று முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்த அந்த கும்பல். காரிலிருந்த ராஜேந்திரனைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவரது வலது கால் தொடையில் கத்தியால் குத்தி உள்ளனர். அதனைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் மன்னார்குடிக்கு காரை ஓட்டி வந்த அந்த மர்ம கும்பல், சவளக்காரன் பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் ராஜேந்திரனை தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த மன்னார்குடி தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி நகராட்சி ஊழியர்கள் மற்றும் சீர்காழி நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர், ராஜேந்திரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கடத்தல் சம்பவம் வேறு ஏதேனும் சொத்து பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா, அல்லது சீர்காழி பகுதியில் பணியாற்றியபோது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நிகழ்ந்ததா, என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மன்னார்குடி

இது தொடர்பாக தொடர்பாக காவல்துறையினரிடம் ராஜேந்திரன் அளித்த வாக்குமூலம் திரைப்பட பாணியில் திடுக்கிட வைக்கிறது. தனது உறவினர் ஒருவர் தான் தன்னை கடத்தி மிரட்ட சொன்னதாகவும் இதற்காக இரண்டு லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், ஆனால் கடத்த சொன்ன அந்த உறவினர், தங்களுக்கு வெறும் 30,000 ரூபாய் மட்டுமே தந்ததாகவும் அந்த கும்பல் பேசிக் கொண்டதாக ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பண பேரம் தொடர்பாக, 5 பேர் கொண்ட அந்த கடத்தல் கும்பல் யாரிடமோ, போனில் மிகவும் கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும். தங்களுக்கு முழுமையாக பணம் கிடைக்காத கோபத்தில்தான் தன்னை கடுமையாக தாக்கி கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கடத்தலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி, மன்னார்குடி நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக, தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தனர். இதனால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக, கூலிப்படையைச் சேர்ந்த நான்கு பேரிடம் காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fu5QHu
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*