இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய மயில்! -கேரளாவில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்

0

கேரள மாநிலம் திருச்சூர் புன்னயூர்குளம், பீடிகப்பறம்பை சேர்ந்த மோகன் என்பவரது மகன் பிரமோஸ்(34). திருச்சூர் மாரார் ரோட்டில் ஒரு தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் வீணா(26) என்ற பெண்ணுக்கும் நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வீணாவும் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பிரமோஸ் தனது மனைவி வீணாவுடன் பைக்கில் பயணம் செய்திருக்கிறார். அய்யந்தோள் - புழய்க்கல் ரோட்டில் பைக்கில் சென்றுகொண்டிருந்தனர் தம்பதியினர். அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டின் குறுக்கே ஒரு மயில் பறந்து சென்றுள்ளது.

அந்த மயில் திடீரென பைக்கில் சென்ற பிரமேசின் நெஞ்சில் மோதியது. பைக்கின் வேகமும் சேர்ந்துகொள்ள பிரமேஷ் நிலைதடுமாறினார். இதனால் பைக்கை சரியாக ஓட்டமுடியாமல் திணறினார். கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில், மற்றொரு பைக்கில் சென்றுகொண்டிருந்த தனேஷ்(37) என்பவர் மீது மோதியதுடன், அருகில் உள்ள காம்பவுண்ட் சுவரில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான பைக்

பைக்கில் இருந்த பிரமோஸும், வீணாவும் தூக்கிவீசப்பட்டனர். இதில் பிரமோஸ் படுகாயம் அடைந்ததில் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். பிரமோஸின் மனைவி வீணா படுகாயம் அடைந்தார். மேலும் பிரமோஸின் பைக் நிலைதடுமாறி மோதியதால் மற்றொரு பைக்கில் சென்ற தனேசும் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமல்லாது பிரமோஸின் மார்பில் மோதிய மயிலும் சம்பவ இடத்திலேயே விழுந்து இறந்தது. விபத்து ஏற்பட்ட சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு கூடினர்.

Also Read: ஆரணி: கட்டுப்பாட்டை இழந்த கார்; லாரி மோதி விபத்து; கைக்குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!

படுகாயம் அடைந்த வீணா மற்றும் தனேஷ் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணம் அடைந்த பிரமோஸின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. வண்ணம் பூசும் தொழிலாளியான தனேஷ் வேலைக்காக பைக்கில் செல்லும் சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து திருச்சூர் வெஸ்ட் காவல்நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்தியபின் மரணம் அடைந்த மயிலை வனத்துறை அதிகாரி மீட்டுச்செல்கிறார்

மரணம் அடைந்த மயிலின் உடலை வனத்துறை அதிகாரிகள் மீட்டுச் சென்றனர். மயில் மோதியதில் ஏற்பட்ட விபத்து காரணமாக புதுமாப்பிள்ளை மரணம் அடைந்த சம்பவம் திருச்சூரில் சோகத்தை ஏற்படுத்தியது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xTssHG
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*