``எங்களுக்கு ஏழரை சனி நடக்குது''- கூல் 'ஹெலிகாப்டர் பிரதர்ஸ்' டென்ஷனான போலீஸ் டீம்!

0

நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த கும்பகோணம் `ஹெலிகாப்டர் பிரதர்ஸை' தனிப்படை போலீஸ் கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். அப்போது, "எங்களுக்கு ஏழரை சனி நடக்குது அதனால இதுபோன்ற பிரச்னையெல்லாம் நடந்து தான் தீரும்" என தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் சகோதரர்கள் கூலாக கூறியது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் எம்ஆர் கணேஷ்- எம்ஆர் சுவாமிநாதன் இருவரும் சகோரர்கள். கும்பகோணத்தில் விக்டரி பைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம்,கொற்கை கிராமத்தில் பால்பண்ணை உள்ளிட்ட பல தொழில்கள் செய்து வருகின்றனர். சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருப்பதாக கூறி ஹெல்காப்டரிலேயே வலம் வந்ததால் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்பட்டனர்.

தங்களது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பாகப் பணம் திருப்பித் தரப்படும் என அறிவித்து வசூல் செய்தனர். குறிப்பாக செல்வந்தர்கள், வர்த்தகர்கள், கருப்பு பணம் வைத்திருப்பவர்களைக் குறிவைத்து அவர்கள் நிதி வசூல் செய்தனர். தொடக்கத்தில் சொன்னது போலவே திருப்பி தரவும் செய்ததால் பலரும் அவர்களிடம் கோடிகளில் முதலீடு செய்தனர். இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தம்பதியான ஜபருல்லா - பைரோஜ்பானு ஹெலிகாப்டர் சகோதரர்கள் தங்களிடம் ரூ.15 கோடி மோசடி செய்துவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீஸில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சகோதர்கள் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Also Read: கும்பகோணம்: `ஹெலிகாப்டர் சகோதரர்கள் ரூ.600 கோடி மெகா மோசடி?’-புகாரைத் தொடர்ந்து அதிரவைத்த போஸ்டர்கள்

போலீஸ் கஸ்டடியில்

இதையடுத்து பலரும் புகார் அளித்து வந்தனர். மேலும் நிதி நிறுவனம் நடத்தி ரூ 600 கோடி மோசடி செய்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்த 12 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். போலீஸ் தங்களை கைது செய்வதற்கு நெருங்குவதை அறிந்த ஹெலிகாப்டர் சகோதரர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களது நிதி நிறுவனத்தில் பணியாற்றிய மேலாளர் ஸ்ரீகாந்த், கணக்காளர்கள் மீரா, வெங்கடேசன், ஸ்ரீதர் மற்றும் எம்.ஆர்.கணேஷ் மனைவி அகிலா ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வக்கீல் ஒருவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகன் தலைமையில் தனிப்படை எஸ்.ஐ கீர்த்திவாசன் உள்ளிட்ட போலீஸ் படை கைது செய்தனர். பின்னர் தஞ்சை குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்ட பிறகு கும்பகோணம் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய இருவரையும் கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனர்.

இது குறித்து தனிப்படை போலீஸார் தரப்பில் பேசினோம், "ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்த பலரும் அவர்கள் வெளிநாடு தப்பி செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.ஆனால் நாங்கள் விசாரணையை தீவிரபடுத்தியதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனது. சென்னை, விழுப்புரம், பாண்டிச்சேரி என தொடக்கத்தில் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று பதுங்கியிருந்தனர். நாங்கள் சென்னை வரை பின்தொடர்ந்து சென்றோம். ஆனால் அதன் பிறகு அவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அதன் பின்னரும் தனிப்படை போலீஸ் டீம் தேடுதல் வேட்டையினை குறைக்கவில்லை. இந்நிலையில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் எம்.ஆர்.கணேஷ், எம்.எஸ் சுவாமிநாதன் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் உள்ள வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவரது பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை அந்த பண்ணை வீட்டைச் சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தோம்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

மேலும் அவர்களிடமிருந்து 13- க்கும் மேற்பட்ட சூட்கேஸ், பேக்குகள் அதில் இருந்த ஏகப்பட்ட ஆவணங்கள்,ஒரு கார் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தோம். அப்போது போலீஸ் படையிடம் சகோதரர்கள்," நாங்கள் யாரையும் ஏமாத்தை நினைக்கல எல்லாருக்கும் பணம் செட்டில் செய்ய தயாரா இருக்கோம்" எனக் கூறியுள்ளனர். ``அப்புறம் ஏன் ஓடி ஒளியணும்" என போலீஸ் கேட்டதற்கு, "நண்பர்கள் சிலர் போலீஸ் கைது செய்வதற்கு முன்பு, முன் ஜாமீன் வாங்கிடலாம் என யோசனை சொன்னார்கள் அதனால் ஓடிக்கொண்டே இருந்தோம்" என்றனர்.

பின்னர் இருவரையும் தஞ்சை குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்றோம். அதன் பிறகு நள்ளிரவு ஒரு மணி அளவில் கும்பகோணம் அழைத்து சென்று அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வைத்தோம். பிறகு நீதித்துறை நடுவரான நீதிபதி தரணிதரன் முன்பு‌ ஆஜர்படுத்தினோம். அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் சகோதரர்கள் இருவரையும் 19-ம் தேதி வரை 15 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கும்பகோணம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

கும்பகோணம் ஹெலிகாப்டர் பிரதர்ஸ்

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட போது தங்களுக்கு நெருக்கமான சிலரிடம் எம்.ஆர்.கணேஷ், "எங்களுக்கு ஏழரை சனி நடக்குது. அதனால இதெல்லாம் நடந்து தான் தீரும் எல்லாத்துக்கும் பணத்தை கொடுத்துட்டா இதெல்லாம் சரியாகிடும்" என கூலாக சொல்ல, "என்ன வச்சுக்கிட்டு இதெல்லாம் பேசக் கூடாது" என டி.எஸ்.பி அசோகன் அதட்ட அமைதியாகிவிட்டனர்.

பின்னர் அவர்களை ஒருவர் வீடியோ எடுக்க முண்டியடித்துள்ளார்.அப்போது, "எங்ககிட்ட வந்து காசு வாங்கினப்ப தெரியலையா நாங்க யாருனு, இப்ப முன்னாடி வந்து வீடியோ எடுக்க வர்ற நாங்க வரமாட்டோம்னு நினைச்சியா! 20 நாள்ல வெளியே வந்துடுவோம் பார்த்துக்க" என எம்.ஆர்.கணேஷ் அதட்டலாக சொல்லியதாக கூறுகின்றனர். " அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகப்போகுது அதற்கான திதி வருது அத மறந்துடாம செய்யுங்கணு" உறவினர்கள் சிலரிடம் உருக்கமாகக் கூறியுள்ளனர்.

ஹெலிகாப்டர் சகோதரர்களை நேற்று அதிகாலையிலேயே போலீஸார் கைது செய்து விட்டனர். பகல் நேரத்தில் கும்பகோணம் அழைத்து சென்றால் பணம் கொடுத்தவர்கள் திரண்டு விடுவார்கள் பின்னர் நிலைமை சிக்கலாகி விடும் சமாளிப்பதும் கஷ்டம் என்பதை அறிந்து நள்ளிரவு நேரத்தில் கும்பகோணம் அழைத்து சென்று சிறையில் அடைத்ததாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AexZu4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*