தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத சூழலில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த சூழ்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகள் ஓப்பன் டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைத்த வருவாய் மூலம் ஊழியர்களுக்கு சம்பளம் அளித்ததுடன், பல்வேறு செயல்களையும் செய்துள்ள மாநகராட்சி கமிஷனரை பல தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
தஞ்சாவூரில், ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், அதன் எதிரே உள்ள திருவையாறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்து நிலையம், அதிலிருந்த கடைகள் உள்ளிட்டவை இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையம், கடைகள் கட்டப்பட்டன. இதில் மொத்தம் 93 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் விடுவதாக மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார் அறிவித்தார். இதற்கு ஏற்கெனவே கடை வைத்திருந்த வணிகர்கள் ஆளும்கட்சியை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏலம் நடைபெற்ற முதல் இரண்டு நாட்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டப்பட்டனர். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கும் சென்றுள்ளனர்.
ஆனாலும் ஓப்பன் டெண்டர் முறை எந்த தொய்வுமின்றி நடைபெற்றது. பொதுமக்கள் உள்பட பலரும் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் புதிதாக கடை கிடைத்த பலர், `ஓப்பன் டெண்டர் முறை இல்லன்னா நிச்சயம் எங்களுக்கும் கடை கிடைத்திருக்காது’ என கமிஷனரை பாராட்டி சென்றனர்.
இந்நிலையில் கடைக்கான டெபாசிட்,12 மாதத்திற்கான வைப்பு தொகை ஆகிவற்றின் மூலம் கிடைத்த பணத்தின் மூலம் மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போடப்பட்டுள்ளது. அத்துடன் மாநகராட்சி சார்பில் செலுத்த வேண்டியிருந்த மின் கட்டணம் உள்ளிட்டவையும் செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், `மாநகராட்சியில் போதிய வருமானம் இல்லாமல் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம், ஒய்வூதியம் வழங்க முடியவில்லை. அத்துடன் கடந்த 2016-ம் ஆண்டுக்குப் பிறகு ஒய்வு பெற்ற பணியாளர்களுக்கு, ஒய்வூதிய பணபலன்கள், ஒப்பந்த தொழிலாளர்களுக்கான ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் செய்தனர்.
இதனையறிந்த கமிஷனர் சரவணக்குமார் மாநகராட்சி வருமானத்தை பெருக்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார். ஆளும்கட்சியின் ஒரு தரப்பினர், எதிர் கட்சியினர், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் கொடுத்த நெருக்கடிக்கு மத்தியில் மாநகராட்சியின் வருமானத்தை பெருக்குவதற்காக கமிஷனர் ஓப்பன் டெண்டர் முறையை அறிவித்தார். கடைக்கான அட்வான்ஸ் பணம், பன்னிரெண்டு மாதத்திற்கான டெபாசிட் தொகை ஆகிவற்றை கடையினை ஏலம் எடுத்தவர்கள் செலுத்தினர். ஒரு கடை ரூ. 50,000 தொடங்கி லட்ச கணக்கில் ஏலம் போனது குறிப்பிடதக்கது.
வருவாயாக வந்த இந்த தொகையின் மூலம் 970 ஊழியர்கள் சம்பளம்,160 ஒய்வூதியாளர்களுக்கான ஒய்வூதியம் என 11 கோடி ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியிருக்கிறது. இது ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்தது. அடுத்தடுத்து நிலுவையில் உள்ள பென்சன் உள்ளிட்ட தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் சொத்து, தண்ணீர் வரி என பொதுமக்களிடையே வசூலிக்கும் வரி மற்றும் மாநகராட்சி இடத்தில் உள்ள கடைகளுக்கான வாடகை பணம் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து வருடத்திற்கு சுமார் ரூ. 22 கோடி மட்டுமே வருமானமாக வந்தது. ஆனாலும் செலவினங்கள் அதை விட அதிகமாக இருந்ததால் நிதி நெருக்கடி தொடர்ந்தது. இந்நிலையில் ஓப்பன் டெண்டர் மூலம் கடைகளை ஏலம் விட்டதன் மூலம் மட்டும் சுமாராக ரூ. 20 கோடி கிடைத்துள்ளது. இவை தவிர்த்து வரி வசூல் செய்யும் வருவாய் உள்ளது. புரோக்கர்கள், கடையினை குறைந்த வாடகைக்கு எடுத்து உள் வாடகைக்கு விடுவதை தவிர்த்து நேரடியாக ஓப்பன் டெண்டர் முறையை செயல்படுத்தியதால் இவை சாத்தியமாகியிருக்கிறது.
மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட பல கோடி மதிப்புடைய இடங்களை சொற்ப வாடகைக்கு எடுத்து பலர் கோடிகளில் சம்பாதித்து வருகின்றனர். அந்த இடங்களையும் மீட்டு இது போன்ற முற்றையினை கடைபிடித்து ஏலம் நடத்தினால் தஞ்சாவூர் மாநகராட்சியின் வருமானம் எங்கேயோ போய் விடும். பொது மக்களிடம் சொத்து, தண்ணீர் உள்ளிட்ட வரிகளை ஏற்றி அவர்களது தலையில் சுமத்தும் சுழ்நிலைக்கான அவசியமில்லை.
Also Read: தஞ்சாவூர்: மாநகராட்சிக் கடைகள் ஓப்பன் டெண்டரில் ஏலம்; ஆணையருக்கு எதிராக வணிகர்கள் சாலைமறியல்!
இதே முறையை அனைத்து மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்டவைகளில் கடைபிடித்தால் நிதி நெருக்கடி என்றே பேச்சுக்கே இடம் இருக்காது. பணிக்கு வந்து 25 நாள்களில் இந்த பெரும் நடவடிக்கையினை கமிஷனர் சரவணக்குமார் மேற்கொண்டுள்ளார்” எனத் தெரிவித்தனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3xWk0I1
via
