திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பாலிடெக்னிக் மாணவரை, அவரது நண்பர்களே கொடூரமாக கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமான நான்கு பேர் தப்பியோடிய நிலையில், அவர்களை மன்னார்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்ட நிலையில் தற்போதும் கூட பப்ஜி விளையாடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read: நாமக்கல்: பப்ஜி கேம் விளையாடிய மாணவர்! - பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பரிதாபம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் உள்ள நாச்சிகுளத்தைச் சேர்ந்தவர் இஷ்ரத். 22 வயதான இஸ்ரத், மன்னார்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். இவரும், நாச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் வாகித்தும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதில் தீவிரமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இவர்கள் இருவருக்குமிடையே சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இஸ்ரத்தின் நண்பர்களான வாஹித், தீன் ஹனிஸ், மர்ரூஜ், அக்பர் பாஷா ஆகியோர் மன்னார்குடிக்கு வந்துள்ளார்கள். இஸ்ரத்திடம் சமாதானம் பேசுவதாக கூறி, மன்னார்குடி சிவம் நகர் பகுதிக்கு அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அங்கு இஸ்ரத்தை கத்தி மற்றும் உடைந்த பீர் பாட்டிலால், குத்திவிட்டு, வாஹித் உள்ளிட்ட நான்கு பேரும் தப்பியோடியதாகக் கூறுகின்றனர். சம்பவ இடத்திலேயே இஸ்ரத் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி காவல்துறையினர், இஷ்ரத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் திருவாரூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் வந்து நேரடியாக விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக இஸ்ரத்தின் நண்பர்களான வாகித், அப்துல் பாசித், தீன், மப்ரூக் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து மன்னார்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். செல்போன்களில் விளையாடப்படும் பப்ஜி விளையாட்டினால் பலரது வாழ்க்கை சீரழிவதால், இந்தியாவில் இவ்விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இஸ்ரத் மற்றும் அவரது நண்பர்கள் எப்படி பப்ஜி விளையாடியிருக்க முடியும் ? இது சாத்தியம்தானா என கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து திருவாரூர் காவல்துறையினரிடம் நாம் பேசியபோது ‘’இந்தியாவில் பப்ஜி தடை செய்யப்பட்டுள்ளதால், இதற்கான செயலியை செல்போனில் இங்கு யாராலும் டவுன்லோடு கூட செய்ய முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை. மன்னார்குடியில் கொலை செய்யப்பட்ட இஸ்ரத்தும் அவரது நண்பர்களும் செல்போனில் விளையாடியது ஃபிரி பயர் என்ற கேம். இதுபோல் இன்னும் பல செல்போன் கேம்கள் உள்ளன. ஆனால் இவைகளையும் பப்ஜி என்று பலர் தவறாக புரிந்துக்கொள்கிற்றார்கள். இது ஒருபுறமிருந்தாலும், பப்ஜி போலவே இவைகளாலும் ஏரளாமானவர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இவைகளும் தடை செய்யப்பட வேண்டியவைகள்தான்" என்கிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3sel3S7
via
