புதுச்சேரியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் வேகம் குறையத் தொடங்கியிருப்பதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது அரசு. அதனடிப்படையில் 100 பேர்களுடன் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களுக்கான படப்பிடிப்புகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக சினிமா மற்றும் சின்னத்திரைக்கான படப்படிப்புகள் நடந்து வருகின்றன. அதேபோல அனைத்து திரையரங்குகளும் 50% இருக்கைகளுடன் செயல்படத் தொடங்கியிருக்கின்றன.
தற்போது நடிகர் விஜய் சேதுபதி, ‘காத்துவாக்குல 2 காதல்' படப்பிடிப்புக்காக புதுச்சேரிக்கு வந்திருக்கிறார்.
அந்தப் படிப்பிடிப்புக்காக புதுச்சேரியில் தங்கியிருக்கும் நடிகர் விஜய்சேதுபதி நேற்று மாலை முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது, “புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு நடத்துவதற்காக முதலில் நாளொன்றுக்கு 5,000 ரூபாய் மட்டும்தான் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அது 28,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டண உயர்வால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால் அந்தக் கட்டணத்தை குறைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்ததுடன் அதற்கான மனுவையும் அளித்தார். அந்தக் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட முதல்வர் ரங்கசாமி பரிசீலனை செய்வதாக விஜய் சேதுபதியிடம் உறுதியளித்திருக்கிறார்.
from தமிழ் சினிமா https://ift.tt/3kqHQa7
via
