மலையாள சினிமா உலகில் பிரபலமான நடிகர் முகேஷ். 'ஐந்தாம் படை' 'ஜாதிமல்லி' போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். சினிமாவில் இருந்து அரசியலுக்குப்போன நடிகர் முகேஷ் இப்போது சி.பி.எம் கட்சியில் இருக்கிறார். அதுமட்டுமல்லாது கேரள மாநிலம் கொல்லம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ-வாகவும் இப்போது இருக்கிறார். இவர் சினிமா நடிகை சரிதாவை முதலில் திருமணம் செய்துகொண்டார். பின்னர் முகேசும், சரிதாவும் தனித்தனியாக பிரிந்து சென்றனர்.
முதல் திருமணம் விவகாரத்து ஆன பிறகு 2013-ல் மேதில் தேவிகா என்ற டான்சரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகர் முகேஷ். டான்சர் மேதில் தேவிகாவிற்கும் அது இரண்டாவது திருமணம்தான். சுமார் எட்டு ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் முகேசை விட்டு பிரிய உள்ளதாகவும், அதற்காக முறைப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் மேதில் தேவிகா கூறியிருந்தார். நடிகரும் எம்.எல்.ஏ-வுமான முகேசை அவரது இரண்டாவது மனைவி மேதில் தேவிகா விவகாரத்து செய்ய உள்ளது குறித்து பரபரப்பான செய்திகள் வெளியானது.
இதுபற்றி கருத்து தெரிவித்த மேதில் தேவிகா, "முகேஷ் நல்ல மனிதர். அன்புகாட்டுவதில் சிறந்தவர். ஆனால் வாழ்க்கையில் நல்ல கணவராக இருக்கவில்லை. குடும்ப வாழ்க்கையை நல்லபடியாக கொண்டுசெல்ல முடியவில்லை. எட்டு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை புரிந்துகொள்ள முடியவில்லை. விவாகரத்து கேட்டு வக்கீல் நோட்டீஸ் கொடுத்துள்ளேன். கோப்பட்டு பிரிய வேண்டிய அவசியம் இல்லை. என் வாழ்க்கையின் பெரிய மனிதர் அவர்.
எல்லா உறவுகளும் முக்கியமானவை. என்ன ஆனாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்க விரும்பவில்லை. விவகாரத்துக்காக சட்டசபை தேர்தல் முடியும் வரை காத்திருந்தேன். முகேஷ் மிகவும் பிசியான மனிதர். விவகாரத்து குறித்து நான் அவரிடம் ஏற்கெனவே பேசினேன். அமைதியான முறையில், சுமூகமாக இதை கையாள வேண்டும் என நினைத்தேன். இதுபற்றி சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாக கமென்ட்டுகள் பதிவிடுகிறார்கள்" என்றார்.
நடிகர் முகேசை விவகாரத்து செய்வதாக மேதில் தேவிகா அறிவித்ததைத் தொடர்ந்து நெட்டிசன்ஸ் பிசியாகிவிட்டனர். டான்சர் மேதில் தேவிகாவின் முதல் கணவர் யார் எனக் கண்டுபிடிக்கும் படலத்தில் இறங்கினர். ஒருவழியாக மேதில் தேவிகாவின் முதல் கணவன் பெயர் ராஜிவ் நாயர் என்பதை கண்டுபிடித்தனர். அடுத்ததாக ராஜிவ் நாயர் யார் என இந்தச் சமூகத்துக்கு அடையாளம் காட்ட விரும்பினர்.
அதன் ஒருபாகமாக மலையாள சினிமா இயக்குநர் ராஜிவ் கோவிந்தனின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து 'இவர்தான் மேதில் தேவிகாவின் முதல் கணவர் ராஜிவ் நாயர்' எனக் குறிப்பிட்டிருந்தனர். அத்துடன் விடாமல் ராஜிவ் கோவிந்தனின் கவிதைகளை மேதில் தேவிகாவுக்கு சமர்ப்பணம் எனப் புகைப்படத்துடன் வெளியிட்டனர். மேலும் இயக்குநர் ராஜிவ் கோவிந்தனின் ஃபேஸ்புக் பக்கத்தில் "மேதில் தேவிகாவின் முதல் கணவர் ராஜிவ் நாயர் நீங்களா?" எனக் கேள்விக்கேட்டு வறுத்தெடுத்தனர்.
Also Read: மாணவியைத் துடைப்பத்தால் அடிப்பேன் எனப் பேச்சு, விவாகரத்து கேட்கும் மனைவி - தொடர் சர்ச்சையில் முகேஷ்!
இதனால் இயக்குநர் ராஜிவ் கோவிந்தன் அதிர்ச்சியடைந்தார். கேள்விகள் அதிகரித்ததால் தூக்கம் இல்லாமல் தவித்தார். இதுபற்றி சினிமா இயக்குநர் ராஜிவ் கோவிந்தன் கூறுகையில், "மேதில் தேவிகாவின் முதல் கணவர் ராஜிவ் நாயர் நான் இல்லை எனப் பதில் சொல்லிச் சொல்லியே ஓய்ந்துபோனேன். எனக்கும் மேதில் தேவிகாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இதுபோன்று பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். உலகத்தில் எல்லா ராஜிவ்-வும் ஒன்றல்ல" என்றார்.
நடிகர், நடிகையர் மற்றும் பிற பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பர்சனலான கமென்ட்டுகள் பதிவதைத் தவிர்க்கலாமே மக்களே!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Vy5o3I
via
