அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் சில இடங்களில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பெண்களை டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செய்பவர்கள் போல் எண்ணி அவ்வப்போது அத்துமீறி பேசும் சம்பவங்கள் நடக்கின்றன.
Also Read: `3 மணிநேரத்துக்கே முடியல... அவங்களுக்கு ராயல் சல்யூட்!’- கவச உடை பணியில் அரசுப் பேருந்து ஓட்டுநர்
பேருந்து பயணிகளிடம், குறிப்பாகப் பெண்களிடம் ஓட்டுநரும் நடத்துநரும் கனிவாக நடந்துகொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பேருந்தில் நடக்கும் சில சம்பவங்கள் சர்ச்சையாகி விடுகின்றன. அத்தகைய ஒரு சம்பவம் தென்காசி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம்-கடையம் இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்தில் (27 ஏ) குத்தப்பாஞ்சான் என்ற கிராமத்தில் சேர்மக்கனி என்ற பெண் ஏறியுள்ளார். பேருந்தில் ஏறிய அவர் டிரைவரிடம், ஓரிரு நிமிடங்கள் நிறுத்தினால் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் குழந்தையும் வந்துவிடுவார்கள் எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் பேருந்தை நிறுத்த மறுத்த டிரைவர் முப்பிடாதி முத்து என்பவர் அந்த பெண்ணிடம், ‘நான் வேண்டுமானால் அவங்க வீட்டுக்குப் போய் கூட்டிட்டு வரட்டுமா’ என அநாகரீகமாக கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சியடைந்த சேர்மக்கனி ’ஏன் இப்படி அநாகரீகமாகப் பேசுகிறீர்கள்?’ எனக் கேட்டு டிரைவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
கோபத்தில் இருந்த டிரைவர் முப்பிடாதி முத்து, டிரைவர் சீட்டை விட்டு எழுந்து வந்து சேர்மக்கனியின் கையை முறுக்கியதுடன் அவரை செருப்பால் அடிக்கவும் பாய்ந்துள்ளார். அதைப் பார்த்துக் கோபமடைந்த பயணிகள், டிரைவரின் செயலைக் கண்டித்ததுடன் சேர்மக்கனிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். கண்டக்டரும் வந்து சமாதானப்படுத்தியுள்ளார்.
அதன் பின்னரே டிரைவர், தன் இருக்கைக்குச் சென்றுள்ளார். இந்தச் சம்பவத்தைப் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்துள்ளார். சுதந்திர தினத்தன்று நடந்த இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலாகப் பரவியது. டிரைவரின் செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணும் டிரைவரும் கடையம் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தார்கள். பின்னர் இருவரும் அங்கேயே சமாதானமாகப் போவதாகத் தெரிவித்ததால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இருப்பினும், இந்தச் சம்பவம் வைரலாக பரவியதால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி நிர்வாக இயக்குநர் ராஜேஸ்வரன் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரசு பேருந்து டிரைவர் முப்பிடாதி முத்துவை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Uny3IC
via
