ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் பலர், தங்களது அவசர பணத் தேவைகளுக்கு, கந்துவட்டி கும்பல்களிடம் பணம் வாங்கி , அவர்களிடம் சிக்கி, மீள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோல் நிகழ்ந்த அவலங்கள் ஏராளம். இதனை முற்றிலும் ஒழித்துக்கட்ட, தமிழக அரசு கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் கந்து வட்டிக் கும்பல்கள், வெளியில் தெரியாமல் ரகசியமாக இயங்கி கொண்டுதான் இருக்கின்றன.
Also Read: தாயின் இறுதிச் சடங்கிற்கு வாங்கிய கடன், கந்து வட்டி நெருக்கடி; விவசாயக்கூலித் தொழிலாளி தற்கொலை!
இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில், கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மன்னார்குடி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ’’மன்னார்குடி உட்கோட்ட காவல் சரகத்தில், கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது. தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக வட்டிக்கு பணம் வாங்கும் ஏழை, எளிய மக்கள் அதிக வட்டி கொடுக்க முடியாமலும், அதைப் பற்றி புகார் தெரிவிக்க பயந்துகொண்டும் இருக்கிறார்கள். இதனால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதுகுறித்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர், தஞ்சை சரக துணைத் தலைவர், திருவாரூர் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மன்னார்குடி பகுதியில் கந்து வட்டிக்குப் பணம் கொடுக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக பாதிக்கப்படும் நபர்கள், எவ்வித அச்சமும், தயக்கமும் இன்றி புகார் அளித்தால் உரிய விசாரணை மேற்கொண்டு, கந்து வட்டி வாங்கும் நபர்கள் மீது கந்துவட்டி தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், புகார்தாரர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்’’என தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ypcDJY
via
