புதுக்கோட்டை: "அமைச்சரோட உதவிக்கு நன்றி!"- பூட்டானில் தங்கப்பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்கள்!

0

பூட்டான் நாட்டில் பூட்டான் யூத் ரூரல் கேம்ஸ், ஸ்போர்ட்ஸ் கமிட்டி மற்றும் பூட்டான் ஒலிம்பிக் கமிட்டி சார்பில் கடந்த மாதம் மூன்றாவது ஆசிய ஊரக இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தெற்காசிய நாடுகளுக்கான இந்த விளையாட்டுப் போட்டியில், இந்திய ஊரக இளைஞர் அணி உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன. இதில், 19 வயதுக்குப்பட்டோருக்கான கபடிப்போட்டியில் இந்திய ஊரக இளைஞர் அணி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தது. இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கலந்துகொண்டனர். அதில், தங்கம் வென்ற இந்திய அணி வெற்றி பெறுவதற்குப் புதுக்கோட்டையைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் தீபன்ராஜ் ஆகிய இருவரும் டிப்பன்ஸ் ஆடி முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனர்.

விஜயகுமார், தீபன்ராஜ்

இதற்கிடையேதான் அங்கு விளையாட வாய்ப்பு கிடைத்தும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பூட்டான் செல்வதற்குக்கூடப் பண வசதி இல்லாமல் தவித்திருக்கின்றனர். கண்ணில் கனவுகளோடு ஸ்பான்சர் கேட்டு அலைந்தும் கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாகத்தான் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கின்றனர். இதுபற்றித் தகவலறிந்த சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடுத்த சில மணி நேரத்திலேயே தன் உதவியாளர்கள் மூலம் ஒருவருக்கு தலா ரூ.30,000 வீதம் ரூ.60,000 சொந்தப் பணத்தைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார். போட்டியில் கலந்துகொண்டவர்கள் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்து நாட்டிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், சரியான நேரத்தில் கிடைத்த அமைச்சரின் உதவியை மறக்காத விளையாட்டு வீரர்கள் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். வெற்றி பெற்ற கபடி அணிக்கு அமைச்சர் வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இதுபற்றி தீபன்ராஜிடம் கேட்டபோது, "பூட்டான் போறதுக்கு நாள் நெருங்கி வந்திருச்சு. எப்படி ஸ்பான்சர் புடிக்கப்போறோம்ங்கிற கவலை எனக்குள்ள வந்திருச்சு. அப்பதான், என்னோடு செலக்ட் ஆன விஜயகுமார் அண்ணனுக்கு ஸ்பான்சர் கிடைக்கிற மாதிரி அறிகுறி தெரிஞ்சிச்சு. எனக்கு அதுகூட இல்லை.

அமைச்சருடன் விளையாட்டு வீரர்கள்

அதற்கப்புறம்தான், கலெக்டர்கிட்ட மனு கொடுத்தேன். எப்படியும் இழுத்தடிச்சிடுவாங்க. பணம் கிடைக்குமோ, கிடைக்காதோங்கிற குழப்பம் இருந்துச்சு. அந்த நேரத்துல நான் எதிர்பார்க்கவே இல்லை. அமைச்சரோட உதவியாளர் வந்து பேசினாங்க. பூட்டான் போறதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு செலவு ஆகும்னு கேட்டாங்க. உங்களால முடிஞ்சத செய்யுங்கன்னு சொன்னோம். அடுத்த கொஞ்ச நேரத்துலயே எங்க கைக்குப் பணம் வந்திருச்சு. என்னைக்கும் அமைச்சரோட இந்த உதவியை மறக்கமாட்டோம்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ATMtjv
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*