புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காத காரணத்தால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவாதம் இல்லாமல் அவசரச அவசரமாக மத்திய அரசு பல சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது. இஸ்ரேல் நிறுவனத்தின் என்.எஸ்.ஓ அமைப்பு பெகாசஸ் என்ற மின்பொருளை பல நாடுகளுக்கு கொடுத்து, சுமார் 50,000 பேர்களுக்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை அதிகாரபூர்வமாக அதனை வெளியிட்டது.
அதை ஆதாரமாக வைத்து நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று எதிர்கட்சிகள் குரல் கொடுத்தார்கள். நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து பெகாசஸ் மென்பொருளை இந்திய நாட்டுக்கு யாரிடம் கொடுத்தார்கள்? யார் அதை விலைக்கு வாங்கியது? அதற்கும் இந்திய அரசுக்கும் சம்மந்தம் உண்டா? என்பது தொடர்பாக விளக்கத்தை சொல்ல வேண்டுமென்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். ஆனால் மத்திய அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு மத்திய ராணுவத்துறை இணை அமைச்சர், ”ராணுவத்துறை என்.எஸ்.ஓ அமைப்போடு எந்தவித பணப்பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ளவில்லை. நாங்கள் அந்த மென்பொருளை பெறவில்லை என்று தெளிவாக கூறியிருக்கிறார்.
ஆனால் உள்துறை, வெளியுறவுத்துறை, தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட மற்ற துறையைச் சேர்ந்தவர்கள் இந்த மென்பொருளை பயன்படுத்தினார்களா? அதற்கான நிதி யாரால் கொடுக்கப்பட்டது என்பதற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்று பதில் அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சர் இன்றுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்து தெளிவாக இந்திய அரசு பிரதமர் உத்தரவின் பேரிலும், உள்துறை அமைச்சரின் மேற்பார்வையின் பேரிலும் தேச தலைவர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் எல்லாம் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது என்பது தெரிவாக தெரிகிறது. இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கின்ற வேலை. தனிப்பட்ட ரகசியத்தை காப்பதை குழிதோண்டி புதைக்கின்ற வேலை. இது மிகப்பெரிய தேச குற்றமாகும். இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அள்ளித் தெளித்த கோலம் போல அவசர அவசரமாக கடல் மீன்வள மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மீனவ சமுதாயத்தினர் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. மீனவர்களின் மடியில் கையைவைக்கின்ற இந்த மத்திய அரசானது தூக்கி எரியப்பட வேண்டும். நரேந்திர மோடி அரசு சர்வாதிகாரமாக மீனவர்களின் வாழ்வாரத்தை குறைக்கின்ற வகையில் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். இதனை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லையென்றால் மீனவர்களின் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடிக்கும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு 10% இடஒதுக்கீடு கொடுக்க அமைச்சரவையில் முடிவு எடுத்து, அரசு ஆணையாக வெளியிட்டோம். ஆனால் அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதனை தடுத்து நிறுத்தினார். மத்திய சுகாதாரத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் தரவில்லை. பிறகு நீதிமன்றம் சென்றோம். தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீடு தரப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது. தற்போது என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு, 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சி எடுக்க வேண்டும். பட்ஜெட்டுக்கான கோப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம், 15-வது நிதி கமிஷனில் இணைப்போம், கடனை ரத்து செய்வோம், பஞ்சாலைகளை திறப்போம், தேவையான நிதி பெறுவோம் என்று வாக்குறுதி தந்தனர். மக்களும் நம்பி வாக்குகளித்தனர்.
Also Read: ஆளுநர் மாளிகை முன் தரையில் அமர்ந்த முதல்வர்! - புதுச்சேரியை திரும்பிப் பார்க்க வைத்த நாராயணசாமி
மாநில அந்தஸ்துக்காகத்தான் பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க என்று கூறிய ரங்கசாமி மெளனம் காக்கிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சிக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பட்ஜெட் ஒப்புதலுக்கான கோப்புகள் ஒரு மாதம் மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது அதே நிலை முதல்வர் ரங்கசாமிக்கும் ஏற்பட்டுள்ளது. மாற்றமில்லை. எங்கள் ஆட்சியை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்தது போலவேதான் தற்போதைய ஆட்சியையும் புறக்கணிக்கிறது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புதுச்சேரியை புறக்கணிக்கிறார்கள். மின்சாரவிநியோகத்தை தனியார் மயமாக்க ஏற்கமாட்டோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3m0wD2a
via
