வைகை அணைக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறதோ என்று சொல்ல வைத்துள்ளது நடக்கின்ற பரபரப்பு சம்பவங்கள்.
வைகை அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிட அமைச்சர்கள், அதிகாரிகள் சென்றபோது அவர்களை நோக்கி தேனீக்கள் படையெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த 7-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மருத்துவமனை சிகிச்சையில் தற்போது இருந்து வருகிறார்கள்.
திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களின் ஒரு போக பாசனத்திற்கு தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர்கள் இ.பெரியசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், பி.மூர்த்தி ஆகியோர் வருகை தந்தனர்.
Also Read: 12 ஆண்டுக்குப் பிறகு பாசனத்துக்காகத் திறக்கப்பட்ட வைகை அணை! #PhotoCollection
இவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள், நான்கு மாவட்ட கலெக்டர்கள், அலுவலர்கள், பொதுப்பணித் துறை பொறியாளர்கள் ஊழியர்கள், கட்சியினர் வந்திருந்தனர். சிறப்பு பூஜை செய்து மதகுகளை திறக்க அமைச்சர்கள் விசையை அழுத்தியவுடன் தண்ணீர் சீறிக்கொண்டு பாய்ந்தது. அதே வேகத்தில் அணையின் கீழே முதல் மதகுப்பகுதியில் கூடு கட்டியிருந்த தேனீக்கள், சத்தம் கேட்டு கலந்து ரீங்காரமிட்டபடி வேகமாக மேல் நோக்கி அமைச்சர், அதிகாரிகளை சுற்ற ஆரம்பித்தது.
நிலைமையை உணர்ந்துகொண்ட அங்கிருந்த ஊழியர்கள், அமைச்சர்கள்,கலெக்டர்கள், உயர் அதிகாரிகளை வேகமாக கீழே அழைத்து சென்றனர். ஆனாலும் தேனீக்கள் ஆக்ரோஷமாக சுற்றி வந்து தாக்கத் தொடங்கியது. இதில் தேனி கலெக்டர் முரளிதரனும் காயமடைந்தார். அவருக்கு அருகிலிருந்த விருந்தினர் மாளிகையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் என 7 பேர் காயமடைந்தார்கள்.
அவர்களை உடனடியாக தேனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தான் காயமடைந்ததை பொருட்படுத்தாமல், சிகிச்சை எடுத்துவரும் பொதுப்பணித்துறை ஊழியர்களிடம் தேனி கலெக்டர் நலம் விசாரித்தார். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் கிளம்பி வந்த தேனீக்கள் அமைச்சர் உட்பட அனைவரையும் கடுமையாகத் தாக்கியிருக்கும் என்கிறார்கள். தேனீயினால் தாக்கப்பட்டவர்கள் இன்னும் இருக்கலாம் என்றனர் அங்கு வந்தவர்கள்.
வழக்கமாக இதுபோல் தண்ணீர் திறந்துவிட வி.ஐ.பிக்கள் வரும்போது அங்கு இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறதா என்பதை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்திருக்க வேண்டும். அதை செய்யவில்லை. கடந்த ஆண்டுகளிலும் இதுபோல் தேனீக்கள் படையெடுத்து வந்த சம்பவங்கள் நடந்துள்ளதாக ஊழியர்கள் கூறினார்கள்.
4 வருடங்களுக்கு முன் இதே வைகை அணையில்தான், நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாக்கோலை போட்டு அணையை மூடும் திட்டத்தை செல்லூர் ராஜூ தொடங்கி வைக்க, அடித்த காற்றில் தெர்மாக்கோல் பறந்து சென்றது உலம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல் இல்லாவிட்டாலும், விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்துவிட சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்த தேனி மாவட்ட தேனீக்கள் பறந்து வந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lTXCML
via
