தஞ்சாவூர்: டாஸ்மாக் கடைக்கு சீல்; அதிகாரிகளை மிரட்டிய முன்னாள் திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு

0

தஞ்சாவூரில் கொரோனா வார்டு அமைக்கு பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக தனியாரிடம் உள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தினை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது முன்னாள் தி.மு.க கவுன்சிலர் ஒருவர் கூடுதல் கலெக்டர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் கடை

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களை சிலர் 99 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து டாஸ்மாக் கடை, கிளப் போன்றவற்றை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்ட அரசு அலுவர்கள் கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்களுக்காக வார்டு அமைக்க அந்த இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது இராமநாதன் சபாவில் நடத்தப்பட்டு வரும் தனியார் டாஸ்மாக் கடையினை ஆய்வு செய்தனர். இதில் உரிய அனுமதியில்லாமல் டாஸ்மாக் பார் நடத்தி வருவது தெரிந்து கடைக்கு சீல் வைத்தனர்.

இதில் ஆர்.கே ராமநாதன் சகோதரர்கள் இராமநாதன் சபாவினை குத்தகைக்கு எடுத்து டாஸ்மாக் கடை மற்றும் பார் நடத்தி வருகின்றனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் டாஸ்மாக் கடையினை நடத்தி வருவதாக கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். அப்போது ஆர்.கே குரூப்ஸ் என அழைக்கப்படும் சகோதரர்களில் ஒருவரான ஆர்.கே. நாகராஜ் அந்த இடத்திற்கு வந்தார். அவர் தி.மு.கவில் முன்னாள் கவுன்சிலர் மற்றும் தற்போது வார்டு செயலாளராக இருப்பது குறிப்பிடதக்கது.

Also Read: தஞ்சாவூர் : ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்!

டாஸ்மாக் கடை மற்றும் பார்

நாகராஜ், "என்ன சார், சீல் வச்சீங்கண்ணா என்னால உடைக்க முடியாதா" எனக் கூடுதல் கலெக்டரிடம் கேட்டுள்ளார். இதனைக் காதில் வாங்காத அதிகாரிகள் சீல் வைக்க வலியுறுத்தி சீல் வைக்கப்பட்டது. உடனே, "டேய், அந்த சீல உடைங்கடா" என அதிகாரிகளை மிரட்டுவது போல் கத்தியுள்ளார் என்கின்றனர். மேலும், "சார் முதல்ல இது என்ன ஊர்னு தெரிஞ்சுக்கங்க, இதுபோல பல அதிகாரிகளை நாங்க பாத்துட்டோம்" எனவும் மிரட்டினார் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் மீது புகார் செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்,தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தரப்பில் பேசினோம், " நகரின் மையப்பகுதியில் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சுமார் 4 ஏக்கர் இடத்தினை மாத வாடகை ரூ 480 வீதம் 99 வருட குத்தகைக்கு எடுத்துள்ளனர் ஆர்.கே.ராமநாதன் சகோதரர்கள்.இதே போல் ஒரு கிளப் மற்றும் லாட்ஜ் ஒன்றையும் வேறு சிலர் எடுத்துள்ளனர். கொரோனா கட்டுப்படுத்துதல் பணிக்காக அந்த இடங்களை பயன்படுத்த ஆய்வு செய்தோம்.அப்போது திமுக பிரமுகரான நாகராஜ் எங்களை பயமுறுத்தி மிரட்டினார்.

அது ஒரு புறம் இருந்தாலும் கோடிகணக்கில் மதிப்புடைய இடத்தினை சொற்ப வாடகைக்கு எடுத்துள்ளனர்.அதன் மூலம் வருடத்திற்கு சுமார் ரூ 5,000 மட்டுமே மா நகராட்சிக்கு வருமானம் வருகிறது. ஆனால் அவர்கள் அதே இடத்தில் கடைகள் கட்டி ஆயிரகணக்கான ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்டுள்ளனர். வேறு எந்த ஊரிலும் இதுபோல நடந்து பார்த்ததில்லை. மாநகராட்சி போதிய வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் இது போன்ற இடங்களைக் கையக்கப்படுத்த நினைக்கிறோம். ஊரில் உள்ள மக்களுக்காத்தான் அதிகாரிகள் இருக்கிறார்கள் அந்த ஊர் நல்லா இருக்கணும் என்கிறதுக்காக அதிகாரிகள் இதனை பல தடைகளை தாண்டி செயல்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்கிறோம். மேலும் அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட அறிஞர்கள் நாடகம் நடத்திய, நாடகத்தை கண்டுகளித்த இடம் என்பதால் இந்த இடத்துக்குத் தனிச்சிறப்புண்டு.

சபாவில் ஆய்வு செய்த் அதிகாரிகள்

தி.மு.க, அ.தி.மு.க என எந்த கட்சியாக இருந்தாலும் அதிகார பலத்துடன் அவர்கள் கோலோச்சி வருவது தான் வேடிக்கை. தி.மு.க ஆட்சியிலாவது அந்த இடங்கள் மீட்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது நிச்சயம் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர். ஆர்.கே.ராமநாதன் சகோதரர்கள் தரப்பில், இவை அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3CgonRl
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*