கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்றது சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில். இங்கு ஆண்டுதோறும் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக மேல்சாந்தி தேர்வு செய்வது வழக்கம். மலையாள பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை சபரிமலை ஐயப்ப சுவாமி சந்நிதி முன்பு வைத்து குலுக்கல் முறையில் தேர்வு செய்து மேல் சாந்தியாக நியமிப்பது வழக்கம்.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மேல்சாந்தி மற்றும் மாளிகைப்புறம் சந்நிதி மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஓர் ஆண்டு முழுவதும் பூஜைகளில் ஈடுபடுவார்கள். மண்டலகால மகரவிளக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மாதாந்திர பூஜைகள், பங்குனி உத்திரத் திருவிழா கால பூஜைகளையும் தலைமை ஏற்று செய்வார்கள். அதன் பின்னர் அடுத்த மண்டல மகரவிளக்கு காலத்திற்கு குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்படுவர்.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மேல்சாந்தி நியமனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மந்திர, தந்திரங்களும், பூஜை முறைகளையும் முறைப்படி கற்ற இந்துக்களை சாதி வித்தியாசம் பார்க்காமல் சபரிமலை மேல்சாந்தியாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கேரளத்தைச் சேர்ந்த பி.டி.ஜெ.எஸ் என்ற பாரத தர்ம ஜனசேனா என்ற அமைப்பு போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
பி.டி.ஜே.எஸ் என்ற கட்சி பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான அரசியல் இயக்கம். பா.ஜ.க-வுடன் கூட்டணியில் உள்ள பி.டி.ஜெ.எஸ் சபரிமலை மேல்சாந்தி விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக கேரள தலைமைச் செயலகம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது அக்கட்சி.
இதுகுறித்து பி.டி.ஜெ.எஸ் கட்சியின் தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளி கூறுகையில், "சாதி பிரிவினையை ஏற்படுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு இவ்வாறு நடந்துகொள்கிறது. சபரிமலையில் மேல்சாந்தியாக மந்திரம் மற்றும் பூஜைகளை முறைப்படி கற்ற இந்துக்களை சாதி பேதம் இல்லாமல் நியமிக்க வேண்டும். சாதி பேதம் இல்லாமல் புதிய கேரளம் உருவாக சபரிமலை மேல்சாந்தி நியமனத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்போது தலைமைச் செயலகம் முன்பு தொடங்கிய போராட்டம் கேரளம் முழுவதும் நடத்தப்படும்" என்றார்.
இது எளிதில் நடந்துவிடாது என்பதை உணர்ந்த பா.ஜ.க இந்த விவகாரத்தில் அமைதியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இந்து அமைப்புகள் விவாதம் நடத்த வேண்டும் என்றும் துஷார் வெள்ளாப்பள்ளி வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரளத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக சில கோயில்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த சி.பி.எம் ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் முதன் முதலாக கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் பிரசித்திபெற்ற சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
Also Read: சபரிமலை படி பூஜையின் போது ஐயப்பன் நிகழ்த்திய அற்புதம் | மாது பாலாஜி | Sakthi Vikatan
சபரிமலை மேல்சாந்தி நியமன விஷயத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கு தாங்கள் தயாரில்லை என திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஏற்கெனவே கூறியுள்ளது. இதுகுறித்துக் கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேசிய பிரசார சபை தலைவர் ஆர்.ஷாஜி சர்மா, "அறியாமை காரணமாக பி.டி.ஜெ.எஸ் கட்சி போராட்டம் நடத்துகிறது. சபரிமலையில் மேல்சாந்தி நியமிக்கும் விவகாரத்தில் தேவசம் போர்டு அலுவலகம் முன்போ, தலைமைச் செயலகம் முன்போ போராட்டம் நடத்தி எந்தப் பயனும் இல்லை. நீதிமன்றத்தை நாடுவது நல்லது" எனக் கூறியுள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3jjXUJX
via
