வேலூர் மாவட்டம், குடியாத்தம் தங்கம் நகரைச் சேர்ந்தவர் சூர்யா வெங்கடேசன். வயது 25. இவர், டெல்லியிலுள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவருகிறார். சூர்யா வெங்கடேசனுக்கும், காட்பாடியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண், சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நாளடைவில் இருவரின் நட்பும் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, போனில் பேசி வந்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது, டெல்லியிலிருந்து சூர்யா வெங்கடேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டிலிருந்தபடியே, வேலை பார்த்துவருகிறார். இந்த நிலையில், இளம்பெண்ணுடன் சூர்யா வெங்கடேசனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
Also Read: வேலூர்: 14 வயது சிறுமிக்கு 37 வயது நபருடன் திருமணம்! - வன்கொடுமை வழக்கில் தாயும் கைது
கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை தவிர்த்துவந்த இளம்பெண் மீது காதலன் சூர்யா வெங்கடேசன் கடும் கோபமடைந்துள்ளார். செல்போனில் தொடர்புகொண்டு மிரட்டத் தொடங்கினார். அதற்கும் அந்தப் பெண் பணியவில்லை. இதனால், இளம்பெண்ணின் பெற்றோர் செல் நம்பரைக் கண்டுபிடித்து, ‘‘உங்கள் மகளின் போட்டோவை மார்பிங் செய்து வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப் போகிறேன்’’ என்று நேரடியாகவே மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று புகாரளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து சூர்யா வெங்கடேசனைக் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AvqYFs
via
