தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில், பழைய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்ட கடைகளுக்கு ஆணையர் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் நடத்தினார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். டி.கே.ஜி நீலகமேகம் எம்.எல்.ஏ தரப்பை சேர்ந்த சிலரும் ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூரில், ஸ்மார்ட் சிட்டித்தின் கீழ் பழயை பேருந்து நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு வழித்தடங்களுக்கு செல்லும் பேருந்து நிலையம் அதிலிருந்த கடைகள் ஆகியவை இடிக்கப்பட்டு புதிதாக பேருந்து நிலையம் கடைகள் கட்டும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதன் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், பேருந்து நிலையங்களில் கட்டப்பட்ட 93 கடைகள் ஓப்பன் டெண்டர் முறையில் ஏலம் விடப்படும் என ஆணையர் சரவணக்குமார் அறிவித்தார். இதற்கு ஏற்கெனவே கடை வைத்திருந்த வணிகர்கள் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஏலத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஏலம் நடத்தலாம் ஆனால் கடைகள் ஒப்படைப்பதாகக்கூறி அறிவிக்கக்கூடாது என நீதிமன்றம் அறிவித்துள்ளதாகத் தெரிகிறது
இதனை தொடர்ந்து நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் ஏலம் நடந்தது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. புதிதாக ஏலம் எடுப்பதற்கு வந்தவர்கள், வணிகர்கள் என ஏராளமானோர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அலுவலகத்திற்க்கு முன்பாக நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது.
புதிதாக ஏலம் எடுக்க வந்தவர்கள் அதற்கான விண்ணப்பத்தை அங்கு வைக்கப்பட்ட பெட்டியில் போட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் சரணவகுமார் முன்னிலையில் பெட்டியைத் திறந்து அலுவலர்கள் விண்ணப்பங்களை எடுத்து பிரித்தனர். இதையடுத்து தி.மு.க., மாநகர துணை செயலாளரான நீலகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள், கமிஷனர் சரவணகுமாரிடம், "அலுவலகம் முன்பு ஏகப்பட்ட பேர் கூடிவிட்டனர் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அனைவரையும் வர சொல்லாதது தவறு" என மிரட்டும் தொணியில் பேசியுள்ளனர். இதனை கண்டுக்காத ஆணையர் கமிஷனர் அந்த இடத்தை விட்டு சென்றதுடன் ஏலம் விடுவதற்கான பணியைத் தொடங்கினார்.
Also Read: தஞ்சாவூர் : ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றும் பணி; மாநகராட்சி கமிஷனருடன் திமுக நிர்வாகிகள் வாக்குவாதம்!
இதனை தொடர்ந்து ஏற்கெனவே கடை வைத்திருந்த வணிகர்கள், தி.மு.க.,நிர்வாகிகள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தின் வெளியில் நின்றுக்கொண்டு,பழைய ஆட்களுக்கு கடைகளை ஓதுக்கீடு செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். கொரோனா காலத்தில் எந்தவித கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையையும் பின்பற்றாமல் ஆணையர் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி கோஷமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆணையர் மறியலில் ஈடுபட்ட திமுக., நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் உள்ளிட்டோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையில், ஒரு கடை மாற்றுதிறனாளி ஒருவர் ஏலம் கோரியிருந்தார். அவருக்கு ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீதமுள்ள கடைகள் அனைத்திற்கும் இரண்டு நாள்கள் ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி தரப்பில் பேசினோம்," மாநகராட்சிக்கு போதுமான வருமானம் இல்லாததால் ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத சூழல் நிலவுகிறது. வருமானத்தைப் பெருக்கும் நோக்கில் ஆணையர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக பேருந்து நிலைய கடைகளுக்கு ஓப்பன் டெண்டர் முறையினை அறிவித்தார். இதற்கு வணிகர்கள் மற்றும் தி.மு.கவைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும் டெண்டர் பணியினை நடத்தினார். மாற்றுத் திறனாளி ஒருவர் ரூ 40,000 கடையினை வாடகைக்கு எடுக்க முன் வருகிறார். ஆனால் தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ நீலமேகத்தின் தூண்டுதல் பேரில் அவரது ஆதரவாளர்கள் சிலர் தொடர்ந்து பிரச்னை செய்து கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏவின் உறவினரான பிரகாஷ், நீல்கண்டன்,சங்கர் உள்ளிட்டவர்கள் மற்றும் வணிகர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பழைய வணிகர்களுக்கே கடையினை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு, ``எல்லாம் சட்டப்படி நடந்து கொண்டிருக்கிறது உங்களையும் ஏலத்தில் கலந்து கொள்ளவும் சொல்லியாச்சு அப்புறம் ஏன் இதனை செய்ய விடமாட்டங்கிறீங்க" என ஆணையர் கேட்டார்.
இதையடுத்து வணிகர்கள் மூன்று நாள்கள் ஏலத்தை தள்ளி வைக்க வேண்டும் எனக் கூறினர். "நீங்கள் ஏலத்தில் கலந்து கொண்டு கடையினை எடுத்துகங்கனு சொன்னதுக்கு எங்களிடம் பணம் இல்லை" எனத் தெரிவித்தனர். எதாவது ஒன்றை சொல்லி ஏலத்தை நடத்த விடக்கூடாது என்பதில் பலர் தெளிவாக இருக்கிறார்கள் ஆனால் சட்டப்படி எல்லாம் நடைபெறும் என ஆணையர் தெரிவித்தார்.
மேலும் சிலர், "ஓப்பன் டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ நீலமேகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் குடைச்சல் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. பெரிய அளவில் கூட்டம் வரும் என தெரிந்தும் போலீஸ் அதனை தடுக்க தவறிவிட்டது. சொல்லப்போனால் ஆணையரின் இந்த முயற்சிக்கு போலீஸ் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை அதனாலே இது போன்ற சலசலப்புகள் ஏற்பட்டது" எனத் தெரிவித்தனர்.
வணிகர்கள் தரப்பிலோ,"பல ஆண்டுகள் கடை வைத்திருந்த நாங்கள் இரண்டு வருடமாக கடை இல்லாமல் போனதால் வருமானம் இல்லாமலும், தற்போது வாழ்வாதாரம் இல்லாமலும் இருக்கிறோம். அதனாலேயே எங்களுக்குக் கடையினை ஒதுக்க வேண்டும் என பல வகையில் போராடி வருகிறோம்" எனத் தெரிவித்தனர். இரண்டாவது நாளான இன்றும் ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ டி.கே.ஜி நீலமேகத்தின் ஆதரவாளர்கள் மற்றும் வணிகர்கள் கமிஷனருக்கு எதிராக கோஷமிட்டு, ஏலத்தை கை விட வலியுறுத்தியும் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஏலம் விடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3iFwWxn
via
