`நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடையாது!' - தமிழக அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி

0

பயிர்க் காப்பீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, 2021-2022-ம் ஆண்டில் நெல் மற்றும் தட்டைப் பயறு தவிர மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் ஆக.31-ம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் பெரும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது.

Agriculture (Representational Image)

Also Read: `காலம் கடந்துவிட்டது; குறுவை பயிர்க்காப்பீட்டை ஏன் அறிவிக்கவில்லை?' - கேள்வியெழுப்பும் விவசாயிகள்

காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, இந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மிகவும் உற்சாகமாக, குறுவை நெல் சாகுபடிக்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் ஈடுபட்டார்கள். வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக பரப்பில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்ததால் விவசாயிகள் மிகுந்த குழப்பமடைந்தார்கள். ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பு ஜூன் மாதமே வெளியாகிவிடும். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் ஜூலை 31-ம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்துமாறு தமிழக வேளாண்மைத்துறை, பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியாகிவிடும்.

ஆனால் இந்த ஆண்டு ஜூலை கடைசி வாரம் நெருங்கிய பிறகும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகததால் விவசாயிகள் கவலை அடைந்தார்கள். குறுவை நெற்பயிர்களில், இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு மகசூல் இழப்பு உருவானால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் எனக் கவலை தெரிவித்திருந்தார்கள். ஆனாலும் தமிழக அரசு தங்களை கைவிடாது என டெல்டா விவசாயிகள் நம்பிக்கையோடு காத்திருந்திருந்த நிலையில்தான், 2021-2022-ம் ஆண்டில் நெல் மற்றும் தட்டைப் பயறு நீங்கலாக மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் ஆக.31-ம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

விமல்நாதன்

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ``நெற்பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடையாது என சொல்வது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள், குளறுபடிகள் இருப்பது இருந்தாலும் கூட இயற்கை இடர்பாடுகள் மற்றும் பூச்சி நோய்த்தாக்குதல்களால் மகசூல் இழப்பு ஏற்படும் விவசாயிகளில் ஒரு குறிப்பிட்ட சதவிதத்தினருக்காவது இழப்பீடு கிடைத்து வருகின்றன. வழக்கமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3.15 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதன் சாகுபடி பரப்பு கணிசமான அளவு அதிகரித்து, 3.50 லட்சம் ஏக்கரை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களையும் சேர்த்து கணக்கிட்டால், 5.5 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.

இதனை ஊக்கப்படுத்த தமிழக அரசு, குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் குறுவைக்கான பயிர் இன்ஷூரன்ஸில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருந்தது வருத்தமளிக்கிறது. நெற்பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் இல்லையென்பதால் விவசாயிகள் கவலை அடைய வேண்டியதில்லை எனவும், ஏதேனும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. நெற்பயிர்களில் முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் இன்ஷூரன்ஸ் திட்டத்தில் ஏக்கருக்கு 34,500 ரூபாய் இழப்பீடு கிடைக்கும்.

நெல் கொள்முதல் நிலையம் (File Pic)

ஆனால் தமிழகம் அரசு, மாநில பேரிடர் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கினால் ஏக்கருக்கு அதிகபட்சம் 8,000 ரூபாய்தான் இழப்பீடு கிடைக்கும். நெற்பயிர்களுக்கு இன்ஷூரன்ஸ் வழங்க தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லையென்றால், தமிழக அரசே பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்தை நேரடியாகவே நடைமுறைப்படுத்தி ப்ரீமியம் பெறலாம். எல்லா ஆண்டுகளும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படுவதில்லை. விவசாயிகளிடமிருந்து பெறப்படும் ப்ரீமியம் அரசுக்கு வருவாயாக அமையும். பேரிடர் ஏற்படும்போது மட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டியதிருக்கும். இத்திட்டத்தை தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்’’ என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2WhORBI
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*