கடலூர் மாவட்டத்தின் தி.மு.க எம்.பி டி.ஆர்.வி ரமேஷ். பண்ருட்டியைச் சேர்ந்த முந்திரி தொழிலதிபரான இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பண்ருட்டியை அடுத்திருக்கும் பனிக்கன்குப்பம் வடக்குத் தெருவில் இவருக்குச் சொந்தமான ‘ஸ்ரீகாயத்ரி கேஷுவ்ஸ்’ என்ற முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அதில் மேல்பாம்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். செப்டம்பர் 19-ம் தேதி மாலை, வேலையை முடித்துவிட்டு ஆலையை விட்டு வெளியேறும்போது அவரை மேனேஜர் கந்தவேலுவும், காவலாளி சண்முகமும் நிறுத்தியிருக்கிறார்கள்.
அதன்பிறகு தொடர்ச்சியாக முந்திரி திருடியதாகக் கூறி கோவிந்தராஜை கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். அதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜுக்கு மூக்கில் ரத்தம் வழிந்திருக்கிறது. எம்.பி ரமேஷ் முன்னிலையிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அன்றிரவு சுமார் 10 மணிக்கு கந்தவேலுவும், சண்முகமும் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு கோவிந்தராஜை அழைத்துச் சென்று அவர் மீது திருட்டு வழக்குப் பதிவு செய்யும்படி கூறியிருக்கிறார்கள். ஆனால் கோவிந்தராஜுக்கு கடுமையான ரத்தக்காயங்கள் இருந்ததைப் பார்த்த போலீஸார் புகாரை வாங்க மறுத்ததுடன், உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறியிருக்கிறார்கள்.
ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மீண்டும் முந்திரி தொழிற்சாலைக்கே அழைத்துச் சென்று மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். அதன்பிறகு அங்கேயே கோவிந்தராஜ் உயிரிழந்தார். மறுநாள் சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பிய கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல், எம்.பி ரமேஷ் உள்ளிட்ட பலர் தனது தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டார்கள் என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
“இறந்த கோவிந்தராஜின் உடலை ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்வதுடன் எம்.பி மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ட்வீட் செய்த நிலையில், இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றார் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இறந்த கோவிந்தராஜின் உடல் ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்தபின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனையிலும், காவல்துறை விசாரணையிலும் கோவிந்தராஜ் அடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து செம்படம்பர் 26-ம் தேதி சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டது வழக்கு. இந்நிலையில்தான் நேற்று சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி கோமதி, கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் திபா மற்றும் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்டவர்கள் வழக்கை முழுமையாக ஆய்வு செய்தனர்.
அதற்குப் பின்தான் சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. அதையடுத்து வழக்கில் தொடர்புடைய நடராஜன், கந்தவேலு, அல்லா பிச்சை, வினோத், சுந்தர் என்கிற சுந்தரராஜன் உள்ளிட்ட ஐந்து பேரையும் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவர்களிடம் நேற்று காலை முதல் வாக்குமூலம் பெறும் பணியை மேற்கொண்டனர். அதில் நடராஜன் என்பவர் விசாரணையின்போதே மயங்கி விழுந்ததால் உடனடியாக அவர் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Also Read: கடலூர்: `ஊழியர் மர்ம மரணம்?!’ - திமுக எம்.பி நடத்தும் முந்திரி ஆலைமீது உறவினர்கள் புகார்
தொடர்ந்து மற்ற நால்வரையும் நீதிபதிகள் குடியிருப்பில் நீதிபதி பிரபாகரன் முன்பு இன்று காலை 6.30 மணிக்கு ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜன் குணமடைந்ததும் சிறைக்கு அனுப்பப்படுவார். இந்த வழக்கில் ஏ 1 குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் எம்.பி ரமேஷ் தற்போது தலைமறைவாக இருப்பதாக என்று கூறப்படும் நிலையில், விரைவில் அவரும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் கடலூர் மாவட்ட போலீஸார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Yw0bv4
via
