கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு, 100 நாள்கள் வேலை வாய்ப்பினை அளிக்கும் நோக்கில், `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம்’ கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களைக் கொண்டு ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு நீராதாரங்களை உயர்த்தவும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் குறித்து விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கட்சியினருடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
பின்னர், செய்தியாளர்களிரம் பேசிய அவர், ``விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியைப் பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும். மனிதனை உழைப்பிலிருந்து வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பதென்பது மிக ஆபத்தான போக்கு.
திட்டம் தொடங்கி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. எத்தனை மரங்கள் வைத்திருக்கிறீர்கள், எத்தனை குளங்கள், சாலைகளை சீரமைத்திருக்கிறீர்கள். பல்லாங்குழி ஆடுவது, சீட்டாடுவது இதற்கு தண்டமாக சம்பளம். விவசாயம் சுத்தமாக அழிந்து போய்விட்டது. நூறு நாள் வேலைத்திட்டம் என்பது வெட்டிவேலை” எனப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மேலும், ‘மன்னிப்பு கேள்’ என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ``100 நாள் வேலைத்திட்டம் குறித்து சீமான் பேசிய கருத்தை முழுவதுமாக நிராகரிக்க முடியாது. அவரது கருத்தில் நியாயம் இருக்கிறது” என சீமானின் பேச்சை ஆதரிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், ``100 நாள் வேலைத் திட்டத்தைப் பற்றி தொடர்ந்து தவறாகப் பேசி வரும், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும், நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் மாவட்டம், மதுரை மாவட்டங்களில் 100 நாள் வேலை திட்டத்தினால் கிடைத்த பலனையும், சமூகப் பொருளாதார மாற்றத்தையும் அறிந்து கொள்வதற்கு அழைப்பும், கடிதமும் தனித்தனியாக விடுத்திருக்கிறேன்.
அவர்கள் வருவார்கள் என்றும், அறிந்து கொள்வார்கள் என்றும் நம்பிக்கை இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lksaXk
via
