`மதுவால் நேர்ந்த விபரீதம்' தாத்தா அவரது 5 வயது பேரன் இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த பரிதாபம்!

0

வேலூர் மாவட்டம், திருவலம் அருகிலிருக்கும் திருப்பாகுட்டை அண்ணா நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி வயது 62. கூலி வேலை செய்துவருகிறார். நேற்று முன்தினம் இரவு சின்னசாமி தனது வீட்டுக்குள் அமர்ந்து மது குடித்திருக்கிறார். அந்தநேரம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் வீதியில் நடந்துகொண்டிருந்தது. சின்னசாமியின் குடும்பத்தினர் பிரசாரத்தை வேடிக்கைப் பார்க்க சென்றுவிட்டனர். ஆனால், மகள் வழிப் பேரனான 5 வயது சிறுவன் ருத்தேஷ் மட்டும் சின்னசாமியுடன் வீட்டில் இருந்துள்ளான். போதை ஏறியவுடன் சின்னசாமி மது பாட்டிலை எடுத்து மறைத்து வைக்காமல் அப்படியே எழுந்து சென்று டி.வி-யை ஆன் செய்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சின்னசாமி பாதி குடித்துவிட்டு வைத்திருந்த மது பாட்டிலை குளிர்பானம் என நினைத்துள்ளான் பேரன் ருத்தேஷ். ருத்தேஷ் தாத்தாவுக்குத் தெரியாமல் ஓடிச்சென்று பாட்டிலில் மீதமிருந்த மதுவை எடுத்து வேகமாக குடித்துள்ளான். மது குடித்த சில நிமிடங்களுக்குள் புரை ஏறி சுருண்டு விழுந்த சிறுவன் துடித்துள்ளான்.

மது

பதறிப்போன தாத்தா சின்னசாமி, வெளியில் ஓடிச்சென்று குடும்பத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் ஓடிவந்து, சிறுவன் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மது குடித்துவிட்டதாகச் சின்னசாமி கூறியதைக் கேட்டு ஆத்திரமடைந்த குடும்பத்தினர் அவரை கடும் சொற்களால் திட்டியுள்ளனர். ஏற்கெனவே, இதய நோயாளியான சின்னசாமி தனது கண்முன் பேரன் துடிப்பதை பார்த்தும், குடும்பத்தினர் திட்டியதாலும் வேதனைப்பட்டபோது அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் அவரும் சுயநினைவை இழந்துவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் ஒருவரின் காரில் தாத்தாவும், பேரனும் மீட்கப்பட்டு காட்பாடியிலுள்ள தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லப்பட்டனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள், முதியவர் சின்னசாமி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சிறுவன் ருத்தேஷும் பரிதாபமாக மரணமடைந்துவிட்டான். இந்த துயரச் சம்பவம் குறித்து திருவலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3l4zWVd
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*