`எப்பவும் என்னை சந்திச்சு பிரச்னைகளைச் சொல்லலாம்!' - 90 வயது பஞ்சாயத்து தலைவர் பெருமாத்தாள்

0

தமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களுக்கு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சி வெற்றியைக் கைப்பற்றியது.

வெற்றிச் சான்றிதழுடன் பெருமாத்தாள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட சிவந்திபட்டி கிராம பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, பெருமாத்தாள் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவித்தார். அதற்கான சான்றிதழை வாங்குவதற்காக பெருமாத்தாள் வந்தபோது அனைவருமே அவரைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர்.

90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் தேர்தல் களத்தில் போட்டியிட்டதுடன், வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார். அதனால் அவருக்கு 1,558 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்து இரு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். பெருமாத்தாளை அடுத்து வந்த வேட்பாளரான செல்வராணி என்பவர் 426 வாக்குகள் பெற்றுள்ளார்.

குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் பெருமாத்தாள்

Also Read: `என் வெற்றி சுலபமானதாக இல்லை!' - உள்ளாட்சித் தேர்தலில் வென்ற உமா சங்கர் ஐ.ஏ.எஸ்-ஸின் தங்கை

தன்னை எதிர்த்துக் களமிறங்கிய இரு வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து சிவந்திபட்டி பஞ்சாயத்துத் தலைவராகத் தேர்வாகியுள்ள பெருமாத்தாள் கூறுகையில், ``எங்கள் குடும்பம் பாரம்பர்யமாக தி.மு.க பின்னணி கொண்டது. இதற்கு முன்பு என் மூத்த மகன் கோட்டியப்பன் ஒரு முறை தலைவராக இருந்துள்ளார். அதன் பிறகு இன்னொரு மகன் தங்கப்பாண்டியன் நான்கு முறை பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார்.

இந்த முறை என் மகன் தங்கப்பாண்டியன், பாளையங்கோட்டை யூனியன் வார்டு தேர்தலில் போட்டியிட்டதால் நான் பஞ்சாயத்துத் தலைவருக்குப் போட்டியிட்டேன். நான் மட்டுமல்லாமல் என் மகனும் வெற்றி பெற்றிருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

மூதாட்டி பெருமாத்தாள்

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: `2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!’-கவனம் ஈர்த்த 22 வயது இளம் பட்டதாரிப் பெண்

தேர்தலில் போட்டியிடுவதற்கு முதுமையை ஒரு தடையாக நான் நினைக்கவில்லை. என்னை நம்பித் தேர்வு செய்த வாக்காளர்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பாடுபடுவேன். மக்கள் எந்த நேரத்திலும் என்னைச் சந்தித்து தங்களின் கோரிக்கையைத் தெரிவிக்கலாம். மக்களுக்கு என்னால் முடிந்த நன்மைகளைச் செய்வேன்” என்று நம்பிக்கையோடு பேசுகிறார், மூதாட்டி பெருமாத்தாள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3AwbMra
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*