கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை உடைத்து கற்கள் மற்றும் ஜல்லி, பாறைத்தூள் உள்ளிட்டவைகளை சட்ட விரோதமாக கேரளத்துக்கு கடத்துவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், இயற்கை வளங்களை கொள்ளையடிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பேசினார். அதே சமயம் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், "சீமான் கனிம வளத்துக்கு எதிரா பேசுறாரு, அதை கேரளாவுக்கு கடத்தக்கூடாதுன்னு பேசுறாரு என்கிறார்கள். கேரளா மலையாளிகள் தேசம் என்பதற்காக நாங்கள் கடத்தக்கூடாது என சொல்லல. கேரளா துறைமுகத்துக்கு எதுக்காக தமிழ்நாட்டின் வளங்களை கொள்ளையடிச்சுகிட்டு போகிற. ஏன்னா, கேரளாவுலையும் மலைகள் இருக்கு" என்றவர் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது 'நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள், என்றும், ராஜிவ்காந்தி கொலை தொடர்பான சில கருத்துக்களை பேசியதாகவும் கூறப்படுகிறது.
சாட்டை துரைமுருகனின் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியது தொடர்பாக சாட்டை முருகன் மீது தக்கலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 143, 153, 153ஏ, 505(2), 506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் சாட்டை துருமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Also Read: 'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்
தக்கலையில் ஆர்ப்பாட்டம் முடித்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சாட்டை துரைமுருகனை நாங்குநேரியில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அங்கிருந்து அவர் தக்கலை அழைத்துவரப்பட்டு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் நாங்குநேரி சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த நிலையில் சாட்டை துரைமுருகனை நாம்தமிழர் கட்சியில் இருந்து நீக்கி சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சீமான் அறிக்கையில், "திருச்சி மாவட்டம் திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்த அ.துரைமுருகன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதை அடுத்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவுறுத்தலின்படி அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்துக்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது. நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்புவைத்துக்கொள்ள வேண்டியதில்லை என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3v0FbIW
via
