மராத்தானில் வெறும் காலில் ஓடிய மாணவிகள்; ஷூ வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்திய கனிமொழி!

0

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு `மினி மராத்தான்’ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவாக நடைபெற்ற இந்தப் போட்டியை தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

போட்டியை துவக்கி வைத்த கனிமொழி

வ.உ.சிதம்பரம் கல்லூரி முன்பு துவங்கிய மராத்தான் ஓட்டம் தமிழ்ச்சாலை, வ.உ.சி சாலை, கிரேட் காட்டன் சாலை, பழைய துறைமுகம், ஜார்ஜ்ரோடு வழியாக 9.கி.மீ தூரம் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. ஆண்கள் பிரிவில் 900 பேர், பெண்கள் பிரிவில் 800 பேர் என மொத்தம் 1,700 பேர் பங்கேற்றனர்.

பெண்கள் பிரிவில் இரண்டாமிடம், மூன்றாமிடம் தவிர முதல் 10 இடங்களில் முதலிடம் உட்பட 8 இடங்களை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட வெங்கடேஸ்வராபுரம் கிராம கமிட்டி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்.பி. கனிமொழி பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

ஷூ வாங்கிக் கொடுத்த கனிமொழி

பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி ஐஸ்வர்யா, தங்கப்பதக்கம் மற்றும் ரூ.5,000 ஊக்கப்பரிசைப் பெற மேடைக்கு வந்த போது, அவர் காலில் ஷூ இல்லாமல் வெறும் காலுடன் நடந்து வந்ததைக் கவனித்த கனிமொழி, ``என்னம்மா காலுல ஷூ இல்லாம நடந்து வர்ற, ஷூ எங்கம்மா?” எனக் கேட்க, ``எங்கிட்ட மட்டுமில்ல, எங்க ஊர்ல இருந்து வந்திருக்கிற 9 பொண்ணுங்ககிட்டயுமே ஷூ கிடையாது மேடம். வெறுங்காலுலதான் ஓடினோம்.

முதல் பத்து இடங்கள்ல 8 பரிசுகள் நாங்கதான் வாங்கியிருக்கோம்” என வெள்ளந்தியாகச் சொன்னார் ஐஸ்வர்யா. அவர் தோளைத் தட்டிக்கொடுத்த கனிமொழி, உடனே தனது உதவியாளரை அழைத்து 9 பேருக்கும் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கிக்கொடுக்கச் சொன்னார். பரிசளிப்பு விழா முடிவடைந்ததும் அந்த 8 மாணவிகள், மற்றும் வெறும் காலில் ஓடிய மேலும் 5 மாணவிகள் என மொத்தம் 13 பேர், தூத்துக்குடியில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் விற்பனைக்கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஷூ அணிந்த மாணவி

அங்கு மாணவிகள் தங்களுக்குப் பிடித்த நிறத்தில் ஸ்போர்ட்ஸ் ஷூக்களை தேர்வு செய்து கொண்டிருக்கும்போதே கடைக்கு வந்த கனிமொழி, ``என்னம்மா ஷூ சரியா இருக்குதா..?” எனக் கேட்க, ``சரியா இருக்கு மேடம். ரொம்ப நன்றி மேடம்” என்றதும், ``நல்லா படிக்கணும், நல்லா விளையாடணும்” எனச் சொல்லி தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார். ஷூக்களை காலில் அணிந்த 9 மாணவிகளும் மகிழ்ச்சியுடன் ஊருக்குச் சென்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3BqHWpq
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*