திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் காவேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணுரங்கம். அண்ணா காலத்திலிருந்து தி.மு.க-வில் கட்சிப் பணி செய்துவந்த கண்ணுரங்கம் கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது நெஞ்சு வலியால் துடித்து உயிரிழந்தார். சொந்தக் கட்சியிலுள்ள போட்டி நிர்வாகிகள் சிலர் பொது இடத்தில் அவமானப்படுத்தும் வகையில் ஆபாசமாகப் பேசியபோது ஏற்பட்ட அதிர்ச்சியில்தான் கண்ணுரங்கத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் சொல்கிறார்கள். கண்ணுரங்கம் மறைந்த பின் அவரின் மகள்களான 50 வயது மாலாவும், 48 வயது உமாவும் தேர்தல் அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கினர். பொது வாழ்வில் சாதிக்கவும் சபதமெடுத்தனர்.
Also Read: `எப்பவும் என்னை சந்திச்சு பிரச்னைகளைச் சொல்லலாம்!' - 90 வயது பஞ்சாயத்து தலைவர் பெருமாத்தாள்
முதற்கட்டமாக, ஜோலார்பேட்டை ஒன்றியத்திலிருக்கும் அவர்களது காவேரிப்பட்டு கிராமப் பஞ்சாயத்தை கைப்பற்ற வியூகம் வகுத்தனர். அதன்படி, காவேரிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மூத்த சகோதரி மாலா போட்டியிட்டார். இளையவரான உமா காவேரிப்பட்டு ஊராட்சியை உள்ளடக்கிய 5-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க சார்பில் போட்டியிட்டார். இருவருமே தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். தந்தையின் செல்வாக்கும் கைகொடுத்தது.
காவேரிப்பட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மாலாவும், ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட உமாவும் வெற்றிப் பெற்றுள்ளனர். தி.மு.க-வில் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றியச் செயலாளராகவும் உமா பொறுப்பு வகிக்கிறார். இதனால், வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஜோலார்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவர் பதவியைப் பிடிக்கவும் மற்ற கவுன்சிலர்களின் ஆதரவைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார் உமா.
Also Read: மாமனார் எம்.எல்.ஏ - மருமகள் கவுன்சிலர்; ஓட்டுக்கேட்டு ஜெயிக்க வைத்த வி.ஐ.பி-க்கள்!
இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், உமாவின் இளைய மகள் சூர்யா ஐ.ஏ.எஸ் கனவுடன் சிவில் சர்வீசஸ் தேர்வினை மூன்று முறை எழுதியவர். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் 576-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். இருப்பினும் ஐ.பி.எஸ் பதவிதான் கிடைக்கும் என்பதால் ஐ.ஏ.எஸ் லட்சியத்துடன் கடந்த 10-ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வினையும் எழுதியிருக்கிறார் சூர்யா. இந்த நிலையில், தந்தையின் சபதத்தை நிறைவேற்றிய வெற்றிக் களிப்பில் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக சென்னை சென்றுள்ளதாகப் பூரிக்கிறார்கள் அக்காவும், தங்கையும்..!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3BFHBPw
via
