காப்பகம் என்ற பெயரில் குழந்தைகளை வேலை செய்யவைத்து டார்ச்சர் - ஆசிரியை கைது; காப்பகத்திற்கு சீல்!

0

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவரது மனைவி கலைமகள்(48). கலைமகள், குடுமியான் மலை அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு குடுமியான மலையில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, 'டாக்டர் அவார்டு தாய்' என்ற பெயரில் குழந்தைகள் காப்பகத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளனர். ஆதரவற்ற,பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என மொத்தம் 19 பேர் காப்பகத்தின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டனர்.

காப்பகம்

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம், குழந்தைகள் பாதுகாப்பு அவசர எண் 1098-க்கு ஒரு புகார் சென்றது. அந்தப் புகாரின் பேரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தினர் அந்தக் காப்பகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், காப்பகத்திலிருந்த குழந்தைகளைக் கலைமகள், தனது வீட்டு வேலைகளுக்கும், கட்டட வேலைகளுக்கும் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படியும், அதோடு காப்பகத்தை மூடவும் அதிகாரிகள் உத்தரவிட்டுச் சென்றனர். பெயரளவிற்கு சில குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்த கலைமகள், மற்ற குழந்தைகளைத் தொடர்ந்து காப்பகத்திலும், வீட்டிலும் வைத்துத் வேலைகளைச் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது..

மீண்டும் காப்பகம் குறித்து வந்த புகாரின் பேரில், செப்டம்பர் 8-ம் தேதி, குழந்தை பாதுகாப்பு நல அலுவலகத்தினர் மீண்டும் காப்பகத்திற்குச் சென்று சோதனை நடத்தி, அங்கிருந்த 7 குழந்தைகளையும் மீட்டு அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குணசீலி கொடுத்த புகாரின் பேரில், கலைமகள், அவரது கணவர் ராஜேந்திரன் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த அன்னவாசல் போலீஸார், தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காப்பகத்தை நிரந்தரமாக மூட உத்தரவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த கலைமகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கலைமகள்

அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் இந்தப் புகார் குறித்து விசாரித்த கேட்டபோது, ``குழந்தை காப்பகத்துக்கு வெளிநாடுகளிலிருந்து பல லட்சம் ரூபாய் நிதி கிடைச்சிருக்கு. அதனைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தாமல் முழுவதுமாக சுருட்டிக்கொண்டதோடு, குழந்தைகளை வீட்டு வேலை தொடங்கி கூலி வேலை வரைக்கும் பார்க்க வைச்சிருக்காங்க. அரசுப் பள்ளி ஆசிரியையான கலைமகள், படிக்கும் பிள்ளைகளுக்குச் சரி வர பாடம் நடத்துவதே இல்லை. பள்ளிக்கும் சரியாக போறதில்லை. அதிமுக ஆதரவாளராக இருந்த அந்த டீச்சர், பள்ளிக்கூடத்துக்குப் போகாம சட்டமன்றத் தேர்தலின் போது விராலி மலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டாங்க. அரசியல் ஆதரவு அதிகமாகவே இருந்துச்சு. அவங்கமேல ஏகப்பட்ட புகார்கள் இருந்தும் அதிகாரிகள் பெருசா கண்டுக்கிடாமல் இருந்தாங்க. இப்போ பிள்ளைகளை மீட்டு காப்பகத்தைச் சீல் வைத்திருப்பது எங்க எல்லாருக்கும் மகிழ்ச்சி" என்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3a3WpeH
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*