`கோயில் நகைகளை உருக்கினால் விளைவுகள் மோசமாக இருக்கும்' - பொன்.ராதாகிருஷ்ணன்!

0

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா பரவல் காரணமாகத் தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தலைவர் தர்மராஜ் தலைமையில் நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ``தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து இந்து ஆலையங்களிலும் இந்துக்களின் புனித நாளாகக் கருதப்படுகின்ற வெள்ளிக்கிழமையும், அதற்கு அடுத்த விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்று கிழமைகளிலும் தரிசனம் செய்யக்கூடாது என்று உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம் கூறும் தமிழக அரசு கொரானா தொற்று பரவிவிடும் என்ற பொய்யான பிரசாரத்தை செய்கின்றது. கொரோனா தொற்று பரவிவிடக்கூடாது என்ற காரணத்தால்தான் பா.ஜ.க பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் முழுக்க இருக்கக்கூடிய அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கியிருக்கிறார். அதைச் சார்ந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார். அதனால்தான் கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது.

நாகர்கோவிலில் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க-வினரான நாங்களும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றோம். ஆனால் தமிழக அரசாங்கத்தால் இந்துக்களின் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதூர்த்தி ஆகிய விழா நிகழ்ச்சிகள் தடுக்கபட்டுவிட்டன. ஆடி வெள்ளிக்கிழமைகள், நாகராஜா கோயிலுக்குச் செல்வது ஆவணி ஞாயிற்றுக்கிழமைகள், புரட்டாசி சனிக்கிழமைகள் என அனைத்தும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டன. எல்லாம் முடிந்த பிறகு கோயிலுக்குள் போகலாம் என்பார்கள்.

இது இந்துக்களையும், இந்துக்களின் உரிமைகளையும் கபளீகரம் செய்கின்ற செயலாக கருதுகின்றோம். தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து ஆலயங்களில் வழிபடலாம் என்ற உரிமையை கொடுத்தாக வேண்டும். இது மறுக்கப்படுகிறது என்றால், எங்கள் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறது என்று நாங்கள் உணர்கிறோம். இது முறையானது அல்ல.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

Also Read: `கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!' - தீ விபத்து நடந்த மண்டைக்காடு கோயிலில் எல்.முருகன்

கோயில்களில் உள்ள நகைகளை எதற்காக உருக்குகிறார்கள். எந்தக் காரணத்தாலும், எந்த ஒரு நகையையும் உருக்கி, உருகுலைத்து இல்லாமல் ஆக்கும் செயலை செய்யக்கூடாது என்பதுதான் தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சருக்கும் எனது கோரிக்கை. அந்த நகைகளை கொடுத்தவர்கள் எல்லாம் அந்தக் காலத்தில் பிரார்த்தனைகள் செய்து அந்தந்த ஆலயங்களில் இருக்கக்கூடிய தெய்வங்களுக்கு வழங்கியிருப்பார்கள். அதை அழிக்கக்கூடிய உரிமை நமக்கு எப்படி இருக்க முடியும். திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் திறக்கப்பட்ட ரகசிய அறையில் இருக்கக்கூடிய நகைகளை உருக்கி இல்லாமல் ஆக்க வேண்டும் என அந்த அரசாங்கம் சொல்லவில்லை. இங்கிருக்கக்கூடிய அரசாங்கம் அதைச் செய்தால் மிகப்பெரிய தவறான செயல். அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் அதை உருக்குவார்கள் என்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/2YA4QfJ
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*