`கொம்பு வைத்த வேங்கையன் என் வெள்ளையன்!’ - உயிரிழந்த காளை... உருகிய விஜயபாஸ்கர்

0

அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தொகுதியான விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். அரசியல், அமைச்சர் பதவியோடு, இவர் கொம்பன், சின்னக் கொம்பன், வெள்ளைக் கொம்பன், கருப்புக் கொம்பன் என்ற கொம்பன் காளைகளை விரும்பி செல்லமாக வளர்த்து வந்தார். அதற்கேற்ப இவரது காளைகள் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பிடிபடாத காளைகளாக பெயரெடுத்தது. இந்த நிலையில் தான், இவர் ஆசையாக வளர்த்த பிடிபடாத காளை என்று பெயரெடுத்த கொம்பன் காளை கடந்த 2018-ல் தென்னலூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் எதிர்பாரதவிதமாக தடுப்பு மரத்தில் மோதி, தலையில் காயம் ஏற்பட்டு இறந்து போனது.

வெள்ளைக் கொம்பன்

செல்லமாக வளர்த்த கொம்பனுக்கு வீட்டுத் தோட்டத்திலேயே சமாதி அமைத்து தினசரி வழிபட்டு வருகின்றனர். இதற்கடுத்து வந்த காளை தான் வெள்ளைக் கொம்பன். வெள்ளைக் கொம்பன் காளையும் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று விஜயபாஸ்கருக்குப் புகழைத் தேடித் தந்தது.

Also Read: மெட்ராஸ் வரலாறு: சென்னையில் தமிழக அரசு நடத்திய ஜல்லிக்கட்டு பற்றி தெரியுமா? - பகுதி 6

இந்த நிலையில் தான், வெள்ளைக் கொம்பன் காளை உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென இறந்து போனது. வெள்ளைக் கொம்பனும் இறந்ததால், விஜயபாஸ்கரின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. கண்ணீர் மல்க விஜயபாஸ்கர் வெள்ளைக் கொம்பன் காளையை அடக்கம் செய்தார்.

"வீரக் களத்தில் வீறுகொண்டு விளையாடி வெற்றிகள் குவித்த கொம்பு வைத்த வேங்கையன் என் வெள்ளையன்...ஜல்லிக்கட்டு களத்தில் அடக்க முடியாத நான்கு கால் காட்டாறு என் வெள்ளையன், வால் முளைத்த சூறாவளி...நான் முதன்முதலில் அன்பைக்கொட்டி வளர்த்த செல்லக்காளை என் வெள்ளையன், வயது முதிர்வு காரணமாக இயற்கை எய்திவிட்டான்!

ஜல்லிக்கட்டு காளையுடன் விஜயபாஸ்கர்

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக என்னை அன்பால் கட்டியவனின் உயிர் அவிழ்ந்து போனது. சொல்லில் அடங்கா துயரம்!வெள்ளையன் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் நெகிழ்ந்து பிரார்த்திக்கிறேன்!” என்று விஜயபாஸ்கர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு தனது காளைக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இந்தப் பதிவை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலரும் பகிர்ந்து தங்களது வேதனையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3DEEzeW
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*