தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த முத்து.மாணிக்கம் என்பவர் யூனியன் சேர்மனாக பதவி வகித்து வருகிறார். இவர் திமுகவில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார். முத்து மாணிக்கம், பேராவூரணி தொகுதி திமுக எம்.எல்.ஏ அசோக்குமாரின் சொந்த மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முத்து மாணிக்கம் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் பணிகளில் இரண்டு சதவிகித கமிஷன் கேட்பதாகவும், அதற்கு இடையூறாக இருக்கும் தன்னை ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு பிஜேபி ஆதரவாளரான ஒருவரை அந்தப் பதவிக்கு கொண்டு வந்துள்ளதாக திமுக பிரமுகரும், குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத் தலைவருமான வைரவன் என்பவர் வெளிப்படையாக குற்றம் சாட்டி வருவகிறார். இது அப்பகுதி திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து வைரவன் என்பவரிடம் பேசினோம், ``திமுகவைச் சேர்ந்த நான் தொடர்ந்து இரண்டாவது முறையாக குருவிக்கரம்பை ஊராட்சி மன்றத்தின் தலைவராக இருந்து வருகிறேன். என்னுடைய ஊராட்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடத்தினேன். இதற்காக தஞ்சாவூர் நாடாமன்ற தொகுதியின் திமுக எம்பி பழநி மாணிக்கம் போட்டோவை பயன்படுத்தி ஃப்ளெக்ஸ் வைத்தேன்.
பழநி மாணிக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் முத்து மாணிக்கம், பழநி மாணிக்கத்தின் போட்டோவை போட்டதற்காக என்னை மிரட்டினார். 37 பஞ்சாயத்துக்களிலும் பணிபுரியும் கிளார்க்குகளை ஒரே நேரத்தில் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு முயற்சி செய்தார் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என அதற்கும் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்', `ஜல் ஜீவன் மிஷன் திட்டம்' உள்ளிட்ட பல திட்டங்களின் மூலம் ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இரண்டு சதவிகித கமிஷன் கொடுக்க சம்மதித்தால் மட்டுமே அந்தப் பணிகளுக்கு ஒப்புதல் கொடுக்க வைப்பேன் என ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் கூறி வந்தார்.
பிடிஓ உள்ளிட்ட அரசு அலுவலர்களை மரியாதை குறைச்சலாக நடத்துவதால் அவர்களும் மனம் நொந்து காணப்படுகின்றனர். யாராக இருந்தாலும், `நடக்குறது எங்க ஆட்சி, நான் சொல்றத நீங்க செய்யுங்கனு' என அதிகாரிகளிடம் அடாவடியாக நடந்து கொள்கிறார். அரசு விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை தன் கல்லாவை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார். இதனை நான் எம்.எல்.ஏவான அசோக்குமாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். `முத்து மாணிக்கம் விஷயத்துல நான் தலையிட்டா என்னோட நிம்மதி போய்டும்' என அவர் ஓபனாகவே கூறி ஒதுங்கி கொண்டார்.
Also Read: `பார் ஏலம் எடுத்துத் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி' - திமுக நிர்வாகிமீது மகளிரணிப் பிரமுகர் புகார்
பழனி மாணிக்கத்திடமும் இதனை தெரியப்படுத்தியிருக்கிறேன். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, கழக வேட்பாளர் அசோக்குமாருக்கு எதிராகவும், கட்சிக்கு எதிராகவும் செயல்பட்டார். இது திமுக தோல்வியடையக் காரணமாக அமைந்தது. எனவே, கட்சித் தலைமை முத்து மாணிக்கத்தை கட்சியிலிருந்து நீக்கியது. பின்னர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு இணைந்து கொண்டார் என்பதும் குறிப்பிடதக்கது. தற்போது ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்டப்பெயர் ஏற்படுவது போல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கமிஷன் விஷயத்தில் கறார் காட்டுவதையும் அதற்கு ஒத்து கொண்டால் தான் குறிப்பிட்ட ஊராட்சிக்கு பணிகள் ஒதுக்கப்படும் என்பதையும் நான் எதிர்த்தேன்.
இதற்காக சில ஊராட்சி மன்றத் தலைவர்களை தூண்டிவிட்டு ஊராட்சி மன்றக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த என்னை நீக்க வைத்தார். பிஜேபியின் ஆதரவாளரான சொக்கநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவரான ராம்பிரசாத் என்பவரை கூட்டமைப்பின் தலைவராகக் கொண்டு வந்திருக்கிறார். இது குறித்து நான் கேட்டதுக்கு, `உன்னால முடிஞ்சத நீ செஞ்சுக்க என்று', என் உறவினர்கள் மூலமாக என்னை மிரட்டுகிறார். கட்சித் தலைமை இதில் தலையிட்டு ஆட்சிக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துவது போன்ற செயல்களிலும் ஈடுபடும் அவருக்கு பாடம் புகட்ட வேண்டும். இதனை முதலமைச்சர் ஸ்டாலினின் கவனத்திற்கும் கொண்டு செல்வேன்" ஆவேசத்துடன் தெரிவித்தார்.
Also Read: லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை; அதிகாரி மற்றும் திமுக, அதிமுக பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு
இது குறித்து முத்து.மாணிக்கத்திடம் பேசினோம், ``ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான கூட்டமைப்பின் தலைவராக இருந்து கொண்டு தன்னுடைய ஊராட்சியின் வளர்ச்சிக்கு மட்டும் கவனம் செலுத்துவதால் மற்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிருதியடைந்தனர். அதனால் வைரவனை மாற்றி ராம்பிரசாத் என்பவரை கூட்டமைப்பி தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் பிஜேபியை சேர்ந்தவர் என கூறுவது தவறு. தன்னுடைய சொந்த நிலங்களை ஐந்து ஊராட்சிகளின் மக்கள் பயன்பாட்டிற்காக கொடுத்து மக்கள் பணி செய்பவர் ராம்பிரசாத் அவர் விரைவில் திமுகவில் சேர இருக்கிறார். என்னுடைய அப்பா மறைந்த கிருஷ்ணமூர்த்தி முன்னால் எம்.எல்.ஏ. எங்களுடையது பாரம்பர்யமான குடும்பம். மக்கள் மத்தியில் செல்வாக்கான குடும்பம் என்னுடையது என்பதை பலரும் அறிவர். கமிஷன் கேட்பதாக அவர் அபாண்டமான குற்றச்சாட்டைக்கூறி வருகிறார். என் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் கமிஷன் கேட்பதாக பல விதமான பொய் புகார்களை பரப்பி வருகிறார். என்னை பற்றி விசாரித்தால் உண்மை தெரியும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3ljgIvi
via
