மலையாள திரை உலகில் பிரபல நடிகர் வேணுகோபாலன் என்ற நெடுமுடி வேணு (73). உடல்நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஐயங்காளி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பட்டது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நெடுமுடி வேணுவின் உடல் சாந்தி கவாடத்தில் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
ஆலப்புழா மாவட்டம் நெடுமுடியில் பள்ளி ஆசிரியர் கேசவன் பிள்ளை - குஞ்ஞிக்குட்டி ஆகியோரது மகனாக 1948 மே 22-ம் தேதி பிறந்தவர் வேணுகோபாலன். பள்ளி பருவத்திலேயே வாசிப்பு, எழுத்து என இயங்கியவர் பல்வேறு நாடகங்களை எழுதியுள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்தவர் பின்னர் கல்லூரி பேராசிரியராகவும் இருந்திருக்கிறார்.
நாடகங்களில் நடித்துவந்தவர் 'ஒரு சுந்தரியின் கதை' என்ற சினிமாவில் முதலில் முகம் காட்டினார். தனது வசிப்பிடத்தை திருவனந்தபுரத்தில் மாற்றிய பிறகு சினிமாவில் நெடுமுடி வேணு என்ற பெயரில் பிரபலம் ஆனார். நடிப்பு உலகில் ஐம்பது ஆண்டுகள், ஐந்நூறுக்கும் அதிகமான வேடங்களில் நடித்துள்ளார் நெடுமுடி வேணு. கதாநாயகனாகவும், வில்லனாகவும், துணை நடிகராகவும், அப்பா, தாத்தா, மாமா என அனைத்து வேடங்களிலும் நடித்து, நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நெடுமுடி வேணு.
தமிழில் இந்தியன், இந்தியன் -2, அந்நியன், சர்வம் தாள மயம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நெடுமுடி வேணு. "நீங்கள் மலையாள திரை உலகில் அனைத்து வேடங்களிலும் நடித்துவிட்டீர்கள். இனி எப்படி நடித்தாலும் மலையாளிகள் ஆச்சர்யப்படமாட்டார்கள். எனவே நீங்கள் தமிழ்த் திரையுலகிற்கு வாருங்கள். அங்கு நிறைய செய்ய வேண்டியது உள்ளது. தாராளம் பணமும் கிடைக்கும். நான் உங்களுக்கு உதவியாளராக வேலை செய்கிறேன்" என கமல்ஹாசன் கூறியதாக ஒரு பேட்டியில் கூறியிருந்தார் நெடுமுடி வேணு.
ஒரு நடிகராகக் குறுகிய காலத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர், 'பூரம்' என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஆங்கில சினிமாவிலும், சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார். சினிமாவுக்கென திரைக்கதைகளும் எழுதியுள்ளார். சினிமா தவிர்த்து கொரோனா காலத்தில் விழிப்புணர்வுப் பாடல்களை வெளியிட்டும் பொதுநலனில் பங்கெடுத்தார். புகழ்மிக்க நடிகர் நெடுமுடி வேணு மரணத்தைத் தொடர்ந்து நடிகர் மம்முட்டி, மோகன் லால் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.
from தமிழ் சினிமா https://ift.tt/3lwx6sb
via
