தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்தவர் சேர்மக்கனி. இவரின் தந்தை, சகோதரி என இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். இவரின் தாய் கஸ்தூரி வயது முதிர்ந்தவர், உடல்நிலை பாதிக்கப்பட்டவர். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள சேர்மக்கனிக்கு திருமணமாகி அவரின் கணவர் பிரிந்து விட தனது கைக்குழந்தையுடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.
சேர்மக்கனியின் குடும்பத்தினருக்கு சொந்தமாக வீடு இல்லை என்பதால், வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், வீட்டு வாடகைகூட கொடுக்க முடியவில்லை என்பதால் அப்பகுதியில் உள்ள உறவினர்கள், பொதுமக்கள் உதவியுடன் அவர்களின் பூர்வீக இடத்தில் தகரக்கூரையில் வீடு அமைத்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் சேர்மக்கனி. அந்த வீட்டிற்கு மின் இணைப்பும் பெற்றுள்ளார்.
அந்த இடத்திற்கு வீட்டு மனைப்பட்டா இல்லை என்பதால் வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், ’வீட்டிற்கான வீட்டுத் தீர்வை ரசீது வேண்டும்’ என அவரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலஈரால் ஊராட்சியில் வீட்டுத் தீர்வை ரசீது கேட்டு விண்ணப்பித்தும் கடந்த 2 ஆண்டுகளாக தீர்வை ரசீது கொடுக்கப்பட வில்லை என்கிறார் சேர்மக்கனி. இதுகுறித்து சேர்மக்கனியிடம் பேசினோம், “நான் கூலி வேலைக்கும், அம்மா நூறு நாள் வேலைக்கும் போறோம்.
அதுல கிடைக்கிற வருமானத்தை வச்சுதான் குடும்பத்தை நடத்திட்டு வர்றேன். மனநிலை பாதிக்கப்பட்ட அப்பா, தங்கைக்கு அரசின் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தாலும், அது அவர்களின் மருத்துவ செலவுக்கு போதவில்லை என்பதால் கடன் வாங்கிதான் மருத்துவ செலவை பார்த்துட்டு வர்றேன். பட்டா கேட்டு விண்ணப்பிச்சா வீட்டுத்தீர்வை ரசீது கேட்குறாங்க. வீட்டுத்தீர்வை ரசீது கேட்டு மேலஈரால் பஞ்சாயத்து ஆபிஸ்ல மனு கொடுத்து ரெண்டு வருஷம் ஆகுது. இதுநாள் வரைக்கும் தீர்வை ரசீது தரலை.
தீர்வை ரசீது தரணும்னா இருபதாயிரம் ரூபாய் தரணும்னு ஊராட்சி செயலாளர் பாலமுருகன்கிறவர் கேட்கிறார். மின்சாரத்துறை மின் இணைப்பு கொடுத்துள்ளது. அதையே ஆதாரமாக வைத்து வீட்டுத்தீர்வை ரசீது தரலாம். அதுல எந்த சிக்கலும் இல்லைன்னு சிலர் சொல்றாங்க. இதுசம்மந்தமா பல முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இனியாவது விட்டுமனைப்பட்டா வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.
இதுகுறித்து விளக்கம் கேட்க மேலஈரால் ஊராட்சி மன்றச் செயலாளர் பாலமுருகனை தொடர்பு கொண்டுப் பேசினோம், ”அது அவர்களின் இடம்தான் என்பதற்கான பத்திரமோ பட்டாவோ இல்லை. ஏதாவது ஒரு ஆதாரம் இல்லமால் வீட்டுத் தீர்வை ரசீது தரமுடியாது. ரசீது தரவில்லை என்பதால் அவர் நான் பணம் கேட்டதாக குற்றம் சாட்டுகிறார். பணம் எதுவும் கேட்கவில்லை” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lG2JiK
via
