நெல்லை டவுண் பகுதியில் அரசு உதவிபெறும் சாஃப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டுகள் கடந்த அந்தப் பள்ளியில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இன்று இடைவேளை நேரத்தின்போது மாணவர்கள் கழிவறைக்குச் சென்றுள்ளனர்.
கழிவறையின் முகப்புப் பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. அதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி எட்டாம் வகுப்பு பயிலும் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வரஞ்சன் என்ற மாணவனும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் டவுண் பாட்டப்பத்து பகுதியைச் சேர்ந்த அன்பழகன் என்ற மாணவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுத்தமல்லி பழவூர் பகுதியைச் சேர்ந்த சுதிஷ் என்ற ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் சிக்கிய சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக்அபுபக்கர் சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய நான்கு மாணவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்த நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், ஆறுதல் தெரிவித்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வஹாப், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரும் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். காயம் அடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “பள்ளியில் சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டதால் இடிந்து விழுந்துள்ளது. பள்ளியில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் இது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் சிறப்புக்குழு அமைத்து அனைத்து பள்ளிகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
இதனிடையே, சாஃப்டர் பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மூவர் உயிரிழந்தது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ஞானசெல்வியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304(2) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி சுவர் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களின் உறுதித்தன்மையை பரிசோதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3smbHpo
via
