தஞ்சாவூர் அருகே வறுமையின் காரணமாக பெற்றோர் தங்களின் நான்கு ஆண் பிள்ளைகளை, இரண்டு வருடத்திற்கு ரூ.62,000 பணத்துக்கு கொத்தடிமைகளாக விற்ற சம்பவம் தெரிய வந்து அரசு அதிகாரிகள் அந்த சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரின் மனைவி பாப்பாத்தி. இருவரும் கரி புகை மூட்டம் போடும் கூலிவேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண், நான்கு ஆண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள். இதில் மகளுக்கு மட்டும் திருமணம் செய்துகொடுத்து விட்டனர். சிறுவர்களான நான்கு மகன்களுடன் வசித்து வந்துள்ளனர்.
வசிக்க வீடு இல்லை, கரி மூட்டம் போடும் பணியும் நிரந்தரமாக இல்லை. போதுமான வருமானம் இல்லாததால் வறுமையான சூழலுக்கு இடையே ஒவ்வொரு நாளையும் ரணத்துடன் கடந்து வந்துள்ளனர். பல நாள் சாப்பிடவும் காசில்லாமல் இருந்துள்ளனர். பெற்றோர் மற்றும் நான்கு மகன்கள் என குடும்பமே பசி, பட்டினி என இருந்து வந்திருக்கிறது.
Also Read: `25 வருசமா நான் பட்ட துயரம் அது!' - கொத்தடிமை முறையை ஒழிக்கப் போராடும் குப்பம்மாள் #SheInspires
இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ், அவரின் அண்ணன் மணிராசு, மைத்துனர் செல்வம் ஆகியோர் தஞ்சாவூர் பகுதியில் உரத்திற்காக செம்மறி ஆடு மேய்த்து வந்துள்ளனர். சுந்தர்ராஜனுக்கு கோவிந்தராஜுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது சுந்தர்ராஜனின் மகன்களும் கோவிந்தராஜ் தரப்பிற்கு ஆடு மேய்ப்பதில் உதவியாக இருந்துள்ளனர். அதற்காக அவர்களுக்கு சாப்பாடு கொடுத்துள்ளனர். பட்டினி கிடந்த தங்கள் வயிற்றுக்கு சாப்பாடு கிடைத்ததில் சிறுவர்கள் நான்கு பேரும் தொடர்ந்து அதனை செய்துள்ளனர்.
பசியுடன், பொருளாதாரப் பிரச்னையும் சுந்தர்ராஜனுக்கு இருந்ததால் ஆடு மேய்ப்பதற்காக தன் நான்கு மகன்களையும் இரண்டு வருடத்திற்கு ரூ.62,000 பணத்திற்கு கொத்தடிமைகளாக விற்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து தஞ்சை மன்னார்குடி பிரிவு சாலை சூரக்கோட்டை அருகே சிறுவர்கள் நான்கு பேரும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். `படிக்குற வயசுல ஆடு மேய்க்குறாங்களே...' என அவ்வழியாகச் சென்ற சிலர் சிறுவர்களிடம் விசாரித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தஞ்சாவூர் ஆர்.டி.ஓ, சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் போலீஸார் நான்கு சிறுவர்களையும் மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்தனர். கோவிந்தராஜிடமும் விசாரணை நடத்தப்பட்டதில், ``சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கிறோம், பணத் தேவையும் இருக்குது, எங்களுக்கு உதவுங்க, மகன்களுக்கு வேலை கொடுங்கனு சுந்தர்ராஜன் கேட்டார். அதன் பேரில் ரூ. 62,000 பணம் கொடுத்து சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினோம்" என்று ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ ரஞ்சித், கொத்தடிமையாக இருந்த நான்கு சிறுவர்களுக்கும் கொத்தடிமை விடுதலை உத்தரவை வழங்கினார்.
``வறுமையின் காரணமாகவே நான்கு சிறுவர்களையும் அவர்களின் பெற்றோர் கொத்தடிமையாக விற்றுள்ளனர். அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்திருப்பது பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை உண்டாக்கும் வகையிலான உதவிகளைச் செய்து அவர்களது நிம்மதியை நிரந்தரமாக்குகின்ற நடவடிக்கையினை அரசு எடுக்க வேண்டும்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3E9BAvd
via
