பணத்துக்காகக் கல்குவாரி உரிமையாளர் கடத்திக் கொலை! - நடந்தது என்ன?

0

திருப்பூர் மாவட்டம், முத்தூர் அருகிலிருக்கும் மங்களப்பட்டி கிழக்கு தோட்டத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (65). இவர், கரூர் மாவட்டம், தென்னிலை அருகிலிருக்கும் கூனம்பட்டி பகுதியில் கல்குவாரி நடத்தி வந்தார். சின்னகவுண்டன்வலசையைச் சேர்ந்த தன் மைத்துனரான செல்லமுத்து என்பவரோடு சேர்ந்து இந்த கல்குவாரியை அவர் நடத்தி வந்ததாகச் சொல்லப்படுகிறது. இதில், சாமிநாதன் பெரும்பாலும் கல்குவாரியில் இரவு நேரங்களில் தங்குவது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சாமிநாதனைத் தாக்கி, அவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியில் அவரை ஏற்றிக்கொண்டு, சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சிக்கு கடத்தி சென்றனர்.

கொலை செய்யப்பட்ட சாமிநாதன்

தொடர்ந்து, சாமிநாதன், தன் மைத்துனர் செல்லமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு, ``என்னை 2 பேர் கடத்தி வைத்திருக்கிறார்கள். மேலும், ரூ.1 கோடி கேட்டு மிரட்டுகிறார்கள். எனவே, ரூ.1 கோடியைக் கொடுத்துவிட்டு என்னைக் காப்பாற்றிச் செல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய சாமிநாதன், ரூ.20 லட்சம் கொண்டு வருமாறு கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் அவரின் செல்போன் எண் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டதால் அதிர்ச்சியடைந்த செல்லமுத்து, இந்த சம்பவம் குறித்து தென்னிலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கல்குவாரி உரிமையாளரைக் கடத்திச் சென்ற நபர்களின் செல்போன் எண்கள், சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி பகுதியில் சிக்னல் காட்டியிருக்கின்றன. இதையடுத்து, அந்தப் பகுதி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

Also Read: `ஆபாசப் புகைப்படங்களை வைத்து ஆண்களை மிரட்டிப் பணம் பார்க்கும் கும்பல்!' - கரூரில் சிக்கிய இருவர்

அதைத் தொடர்ந்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள், சேலம் மாவட்டம், தலைவாசல் காவல்நிலைய ஆய்வாளர் வெங்கடேஷ் பிரபு அந்தப் பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதைப் பரிசோதிக்கச் சென்ற போது, அதிலிருந்த 2 பேர் தப்பி ஓடியிருக்கின்றனர். அதைக் கண்ட போலீஸார் தனிப்படை அமைத்து அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களை விசாரித்ததில், அவர்கள் திருப்பூரைச் சேர்ந்த குவாரி டிரைவர்கள் விஜய் (24), நவீன் (21) எனத் தெரியவந்தது. உறவினர்களான இருவரும், தாங்கள் பணிபுரிந்து வரும் கல்குவாரி உரிமையாளரைக் கடத்தி, அவரிடம் பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து, கடத்தப்பட்ட சாமிநாதன் குறித்து போலீஸார் கேட்டபோது, இருவரும் சாமிநாதன் தங்களை போலீஸில் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்ற பயத்தால் அவரைக் கொலை செய்து விட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கரூர்: போலி ஆவணம்; ரூ. 20 லட்சம் மோசடி! - தலைமைக் காவலர் உட்பட 5 பேர்மீது வழக்கு பதிவு



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3lQKfwe
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*