திருவாரூர்: ஊர்கூடி தார் சாலை அமைத்த கிராம மக்கள்... கவனம் ஈர்க்கும் புத்தகரம் கிராமம்!

0

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஒரு ஊரில் நீண்டகாலமாக பழுதடைந்து கிடந்த சாலையால் அந்த ஊர்மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த மக்களும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணி செய்யும் இளைஞர்களும் பங்களிப்பு செய்து, பெரும் செலவில் பழுதடைந்த சாலையை தார் சாலையாக அமைத்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்ததோடு வரவேற்பையும் பெற்றுள்ளது.

சமீபகாலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊர்மக்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களது ஊரின் நலன் கருதி, நீர்நிலைகளை தூர் வாருவது, மரம் நடுதல் போன்ற பணிகளை செய்து வருவதையும் பார்த்து வருகிறோம். இந்நிலையில்தான் புதிய முயற்சியாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள குமட்டி திடல் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது சொந்த முயற்சியில் தார் சாலை அமைத்திருப்பது பேசுப் பொருளாக உருவெடுத்துள்ளது.

இதுகுறித்து பேசும் புத்தகரம் கிராமவாசிகள், ‘’இது எங்க ஊரோட பிரதான சாலை. இந்த சாலையோட மொத்த தூரம் சுமார் மூணு கிலோமீட்டர். இந்த சாலையை கடந்துதான் நாங்க மத்த பகுதிகளுக்கு போயாகணும். குறிப்பா, கடைத்தெரு, மருத்துவமனைகளுக்கு போகுறதுக்கும், மாணவர்கள் பள்ளிக்கூடங்கள் போயிட்டு வரவும், இந்த சாலையைதான் பயன்படுத்தியாகணும். இந்த சாலை பழுதடைந்து பல வருசம் ஆச்சு. இது குண்டும் குழியுமா இருக்குறதுனால, நாங்க படக்கூடிய கஷ்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த சாலை பார்த்து பயந்து போ யிஆம்புலன்ஸ், பள்ளிக்கூட வாகனங்கள் எதுவுமே எங்க ஊருக்குள்ளார வர்றதில்லை. அவங்களை சொல்லியும் குத்தமில்லை. இந்த சாலையில் கடந்து போகுறதுங்கறது ரொம்பவே சவலான காரியம், நிறைய விபத்துகளும் நடந்திருக்கு.

அதுவும் மழைக்காலங்கள்ல சொல்லவே வேண்டியதில்லை, சாலையில தண்ணீர் தேங்கி நின்னு, நிலைமை ரொம்பவே மோசமாயிடுது. டூ வீலர்கள் போறவங்களும் ரொம்பவே சிரமப்படுறோம். இந்த சாலையை சீரமைச்சி கொடுக்கச் சொல்லி, ஊராட்சி நிர்வாகத்துக்கிட்டயும், திருவாரூர் மாவட்ட நிர்வாகத்துக்கிட்டயும் பலமுறை வலியுறுத்திப் பார்த்துட்டோம். ஆனால் எந்த பலனுல் இல்லை.

தேர்தல் நேரங்கள்ல இந்த சாலையை தார் சாலையாக அமைச்சி கொடுப்போம்னு எல்லா கட்சிகளுமே இதை முக்கிய வாக்குறுதிகளா வைக்கிறாங்க. அந்தளவுக்கு இந்த பகுதி மக்களோட மிகவும் முக்கியமான எதிர்பார்ப்பாக இது இருந்துக்கிட்டு இருக்கு. ஆனால் இந்த பிரச்னைக்கு விடிவு காலம் வராமலே இருக்கு. இதுக்கு மேலயும் அரசாங்கத்தை நம்பி இருந்து எந்த பிரயோஜனமும் இல்லைனுதான், ஊர்மக்கள் எல்லாரும் பணம் போட்டு, தார் சாலை அமைக்க முடிவெடுத்தோம்,

தார் சாலை

இதுக்காக வாட்ஸ்அப் குரூப்களை உருவாக்கினோம். குறிப்பாக, புத்தகரம் கிராமத்துல இருந்து போயி வெளிநாடுகள்ல வேலைப் பார்க்கக்கூடிய இளைஞர்கள் இதுக்கு நிறைய பணம் கொடுத்திருக்காங்க. இந்த ஊர்ல இப்ப வசிக்கிக்கிட்டு இருக்கக்கூடிய ஏழை, பணக்காரங்கங்கற வித்தியாசம் இல்லாமல், எல்லாருமே தங்களால் முடிஞ்ச அளவுக்கு பங்களிப்பு செலுத்தியிருக்காங்க. சுமார் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சேர்ந்துச்சு. தார் சாலை அமைக்குறதுக்கான பொருள்கள் வாங்க இந்த பணத்தை பயன்படுத்தினோம். எங்க ஊர்ல ஆண்கள் பெண்களே களத்துல இறங்கி வேலைப்பார்த்தோம். முதல்கட்டமாக, 750 மீட்டர் தூரத்துக்கு இதுக்கான வேலை நடந்து முடிவடையும் நிலையில இருக்கு. மீதி சாலையை சீரமைக்க எங்கக்கிட்ட இப்போதைக்கு பணம் இல்லை, இதுக்கு தமிழக அரசு தான் ஏற்பாடு செய்யணும்’’ என தெரிவித்தார்கள். ஊர் கூடி சாலை அமைத்த மக்களின் உன்னத செயல் பாராட்டுக்குரியது. ஆனால் அரசு அதிகாரிகள், இதை மனதில் கொண்டு ஊர்மக்களே சாலை அமைத்துக்கொள்வார்கள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக இருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3GKrF0v
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*