கோல்மால்: மொரீஷியஸில் பரிதவிக்கும் நடிகர், நடிகைகள்... எஸ்கேப் ஆனார்களா இயக்குநரும் தயாரிப்பாளரும்?

0
நடிகர் ஜீவா, மிர்ச்சி சிவா இருவரும் ஹீரோவாக நடித்து வரும் படம் ‘கோல்மால்’. முழுப்படமும் மொரீஷியஸில் அதிக பொருட்செலவில் படமாக்கப்படும் என்று பட பூஜையின்போதே அறிவிக்கப்பட்ட படம். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் வினோத் ஜெயின்.

படத்தின் ஷூட்டிங்கிற்காக சில தினங்களுக்கு முன் சென்னையிலிருந்து முன்னணி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பெரிய டீம் ஒன்று மொரீஷியஸ் கிளம்பிச் சென்றது.

சிங்கம், புலி என விலங்குகள் நிறைய உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஷூட்டிங் நடத்துவதாக பிளான். ஆனால், முன்கூட்டியே முறைப்படி அனுமதி வாங்காததால், ஷூட்டிங் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அந்த அனுமதியை வாங்கும்வரை மற்ற காட்சிகளைப் படம்பிடித்திருக்கிறார்கள்.  

மிர்ச்சி சிவா, ஜீவா
ஷூட்டிங் தொடங்கி சில தினங்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நடந்து வந்திருக்கிறது. ஆனால், அங்கு அனுமதி வாங்கும் நடைமுறைகள் தாமதமானது தெரிந்ததும், ஜீவா அங்கிருந்து கிளம்பிவிட்டார். அதேபோல மிர்ச்சி சிவா துபாய் போய் அங்கிருந்து சென்னை வந்துவிட்டார்.

‘ஏதோ சிக்கல்’ என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்துவிட்ட வையாபுரி, மனோபாலா முதலான சில நடிகர், நடிகைகள் மட்டும் டிக்கெட் போடச் சொல்லி நச்சரித்து சென்னை திரும்பிவிட்டனர். போகும்போது பிசினஸ் கிளாஸில் கூட்டிப் போனவர்கள், திரும்பும்போது எகானமி கிளாஸில் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அதன்பிறகுதான் ‘தயாரிப்பாளருக்கு பணப்பிரச்னை’ என ஷூட்டிங் நடத்த முடியாமல் போனதாம். ஓரிரு நாள்களில் நிலைமை சரியாகி விடும் என ஆர்ட்டிஸ்டுகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்தான், திடீரென ஆர்ட்டிஸ்டுகள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி விட்டாராம்.

தயாரிப்பாளர் வெளியேறியது நடிகர், நடிகைகள் யாருக்கும் தெரியாது என்கிறார்கள். தயாரிப்பாளர் வெளியேறியதால் ஆர்ட்டிஸ்டுகள் இயக்குநரிடம் இதுகுறித்துக் கேட்கத் தொடங்க, மறுநாள் இயக்குநரும் எஸ்கேப்.

அதேநேரம், இன்றைய தேதிக்கு ஷூட்டிங்கும் நடக்காமல் ஹோட்டலிலேயே இருபதுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களுடன் டெக்னீஷியன்கள் பலரும் மாட்டிக் கொண்டு என்ன செய்வது, எப்படி நாடு திரும்புவது எனத் தெரியாமல் தவித்து வருகிறார்கள். நாடு திரும்ப அவர்களிடம் பணம் இல்லை.

நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோரும் இதில் அடக்கம்.

இது தொடர்பான படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய சிலரிடம் பேசினோம்.

‘‘மொரீஷியஸ் கொரோனா விதிமுறைகளை ரொம்பவே கடுமையா கடைபிடிக்கிற நாடா இருக்கு. மாஸ்க் சரியா போடலைன்னாலே நாலாயிரம் ரூபாய் அபராதம். அப்படி இருக்கிற சூழல்ல, இவ்ளோ பேர் அங்க ஹோட்டல்ல சும்மா இருந்திட்டிருக்கிறது பிரச்னையாக வாய்ப்பிருக்கு. எப்படித் திரும்பி வருவாங்கனு தெரியலை.

'கோல்மால்' பட டீம்

இன்னொரு வருந்தத்தக்க விஷயம், தயாரிப்பாளர் பணப் பிரச்னைனு எஸ்கேப் ஆகறப்ப உடன் இருக்கிற இயக்குநரோ, பெரிய நடிகர், நடிகைகளோ எல்லாரையும் பாதுகாப்பா கூட்டிட்டுப் போறதுதான் நல்ல குணம். இங்க அந்த மாதிரி நடக்கலை.

தயாரிப்பாளரின் பணப்பிரச்னைக்கு என்ன காரணம்னு தெரியலை, சரியான திட்டமிடல் இல்லைனு தெரியவந்திச்சு. கடைசி நேரத்துல ப்ளான் பண்ணி கிளம்பியிருக்காங்க. அதனால ஃபிளைட் செலவு அதிகமாகி இருக்கு. முறைப்படி முன்னாடியே அனுமதி வாங்காததால், தேவையில்லாத செலவும் அதிகரிச்சிருக்கு.

ஷூட்டிங்குக்காக வெளிநாடு போன இடத்துல ஆர்ட்டிஸ்டுகள் இப்படி மாட்டிக்கிட்டு ஊர் திரும்ப பணம் இல்லாம தவிக்கிறாங்கங்கிறது தமிழ் சினிமாவுக்கே கெட்ட பெயரைத் தந்திடும். விவகாரம் தூதரகத்துக்குப் போனா மேலும் சிக்கலாகிடும்.

இந்த மாதிரியான நிகழ்வுகளால இனிமே வெளிநாடு ஷூட்டிங்னா ஆர்ட்டிஸ்டுகள் மத்தியில பயம் வந்தாலும் வந்துடலாம். எனவே உடனடியா யாராவது இந்தப் பிரச்னையில் தலையிட்டுச் சரி செய்யணும்’’ என்கிறார்கள் அவர்கள்.

'கோல்மால்' பட டீம்

இது தொடர்பாக இயக்குநர் பொன் குமரனிடம் கேட்டோம். ‘‘தயாரிப்பாளருக்கு பணப் பிரச்னை என்பதெல்லாம் பொய். அப்படி எதுவும் இல்லை. படக்குழு அங்கு வசதியான ஹோட்டலில்தான் தங்கியது. எதற்கும் குறைவில்லாமல் பார்த்துக்கொண்டோம். மொரீஷியஸில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டதால் எங்களால் நினைத்தபடி ஷூட்டிங் நடத்த முடியவில்லை. அதனால் சென்னை திரும்பிவிட்டோம். போதுமான விமானங்கள் இல்லாததால், எல்லோரும் ஒரே நேரத்தில் வர முடியவில்லை. ஒவ்வொரு நாளிலும் சிலருக்கே டிக்கெட் கிடைத்தது. அதனால் கொஞ்சம் கொஞ்சம் பேராகத் திரும்புகிறோம். நான் நேற்றுதான் வந்தேன். மற்றவர்களும் விரைவில் வந்துவிடுவார்கள். புத்தாண்டில் மீண்டும் அங்கு போய் ஷூட்டிங் நடத்துவோம்’’ என்றார்.



from தமிழ் சினிமா https://ift.tt/3JhxaGc
via Umn news Tamil

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*