`முதல்வர் பெயரில் கொலை மிரட்டல்; அமைதி காக்கும் காவல்துறை!’ -அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்

0

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய மாநிலம் புதுச்சேரி. அதன் காரணமாகவே முதல்வர் தொடங்கி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என மக்கள் பிரதிநிதிகளும், அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பார்கள். அன்றாடம் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார்கள். ஒவ்வொரு தொகுதியும் மிக குறைந்த ஓட்டு எண்ணிக்கை கொண்டது என்பதால் தொகுதியில் உள்ள அனைத்து குடும்பத்தையும் மக்கள் பிரதிநிதிகள் அறிந்து வைத்திருப்பார்கள். முதல்அமைச்சர், அமைச்சர்களை பொதுமக்கள் எளிதாக சட்டசபையில் சந்திக்க முடியும்.

புதுச்சேரி அரசு

அந்த வகையில் முதலமைச்சர் ரங்கசாமியும் மிகவும் எளிமையான முதல்வர் என்று பெயர் வாங்கியவர். அவரின் வீடு, சட்டமன்ற அலுவலகம், நண்பரின் கடிகார கடை என அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் சந்திப்பார்கள். சில நேரங்களில் தொகுதியை சேர்ந்தவர்கள் கோரிக்கைகளுக்காக ரங்கசாமியிடம் வாக்குவாதத்தில்கூட ஈடுபடுவதுண்டு. அப்படியான நேரங்களில் அவர்களிடம் எந்தவித கோபமும் கொள்ளாமல் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பார். பல நேரங்களில் தன்னிடம் கோபித்துக்கொண்டு சென்றவர்களைக் கூட தாமாகவே அழைத்து பேசுவார். கூடுமானவரை தனது செல்போனுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பதிலளிப்பது அவர் வழக்கம்.

கடந்த 12 ஆண்டுகளாக அமைச்சராகவும், முதல்அமைச்சராகவும் இருந்தவர் என்பதால் மாநிலத்தின் அனைத்து தொகுதியை சேர்ந்தவர்களும் அவரிடம் வந்து சந்தித்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டவர்களாகவே இருப்பார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ரங்கசாமியை செல்போனில் நேரடியாக தொடர்புகொண்ட ஒருவர், தான் காரைக்காலைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரை நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து மழை நிவாரனமாக அறிவித்த ரூ.5,000/- எப்போது ஐயா கிடைக்கும் என்று கேட்டார். அதற்கு ரங்கசாமி, தனக்கு மேலயும், கீழேயும் மந்திரிகள் இருப்பதாகவும், நான் மட்டும் ராஜா இல்லை என்றும் பதிலளித்தார்.

ரங்கசாமி

அந்த உரையாடலில் முதல்வர் ரங்கசாமி கோபமாக பேசவில்லை. அதேபோல அவரிடம் பேசிய நபரும், முதல்வரை அய்யா என்றும், பதில் கூறியபோது சரிங்க அய்யா என்றும் மிகவும் பணிவாகவே பேசினார். அந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து, ``எனது உரையாடலில் மக்களுக்கு தெரியாது ஒன்றுமில்லை. தற்போதிருக்கும் நிர்வாக அமைப்பு காரணமாக திட்டங்களும், திட்டங்களில் முடிவெடுப்பதும், செயல்படுத்துவதும் தாமதமாகிறது” என்று ஊடகங்களுக்கும் விளக்களித்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

இந்நிலையில்தான் ரங்கசாமியிடம் பேசிய அந்த நபருக்கு சங்கர் என்பவர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், தான் முதலமைச்சர் வீட்டில் இருந்து பேசுவதாகவும், சங்கர் என்றும் கூறுகிறார். ரங்கசாமியின் பேசிய நபர் தான் அந்த ஆடியோவை பரப்பவில்லை என்றும் தனக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என பணிந்து பேசியும், சங்கர் கடுமையான, தகாத வார்த்தைகளால் பேசுகிறார். ஒரு கட்டத்தில் நீ என்ன எதிர்கட்சிக்காரனா? என கேட்கிறார்.

செல்போன் ஆடியோ

அவர் ரங்கசாமியின் அனுதாபி என்று கூறுகிறார். இருப்பினும் சங்கர், ”நீ இல்லாவிட்டால், போனில் பேசியதை பரப்பியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் சொல்லு, கிழித்துப் போட்டுவிடுவேன். தொலைத்து கட்டிவிடுவோம், செத்துவிடுவீங்க” என மிரட்டுகிறார். இந்த ஆடியோ புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரிடம் மழை நிவாரணம் கேட்டதற்கு, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது புதுச்சேரிக்கு புதிது என்பதால் பீதியில் உறைந்திருக்கின்றனர் மக்கள்.

”முதல்வரின் பேச்சை சமூக ஊடகங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சீனியர் எஸ்.பி லோகேஸ்வரனை சந்தித்து மனு அளித்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், முதல்வர் பெயரை கெடுக்கும் விதமாக கொலை மிரட்டல் விடுத்தவர் குறித்து வாய் திறக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

Also Read: புதுச்சேரி வைரல் ஆடியோ: `நான் ராஜா கிடையாது’ - நிவாரணம் குறித்த கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில்?!

அதேசமயம், ”முதல்வர் வீட்டில் இருந்து பேசுகிறேன் என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த அந்த சங்கர் என்பவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர், கொலை மிரட்டல் விடுத்த அந்த சங்கர் யார்? முதல்வரின் செல்போனில் பேசிய காரைக்கால் நபரின் செல்போன் எண் சங்கருக்கு கிடைத்தது ? அவரை இப்படி பேச அனுமதித்தது யார் என்றும் கேள்வி எழுப்புகின்றன எதிர்க்கட்சிகள்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3p6Ws1J
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*