நெல்லையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, நெல்லையில் புதிதாகத் திறக்கப்பட்ட கட்சி அலுவலகத்தைப் பார்வையிட்டார். மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை மாவட்டத் தலைவர் மகாராஜன் உள்ளிடோர் அவரை வரவேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ``தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த மூன்று மாதங்களில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும். தமிழகத்தில் இருக்கும் கட்சியின் 60 மாவட்டங்களிலும் சொந்தமாக அலுவலகம் திறக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படைவாதிகள் தமிழகத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. அத்துடன், இலங்கை கொழும்பு குண்டுவெடிப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது.
தமிழகத்தில் தற்போது அடிப்படைவாத சிந்தனையுடன் சிலர் இயங்கி வருகிறார்கள். காவல்துறை சுதந்திரமாக பணிசெய்ய தமிழக அரசு அனைத்து வழிகளையும் செய்து கொடுக்க வேண்டும். பயங்கரவாதம் தலைதூக்க இங்கு எல்லாவிதமான சூழ்நிலையும் இருக்கிறது. அதனால் தமிழக அரசு அதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மடிக்கணினி வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது. 39,000 ரூபாய்க்கு கிடைக்கும் இலவச மடிக்கணினியை 65,000 ரூபாய்க்கு தமிழக அரசு கொள்முதல் செய்திருக்கிறது. எல்காட் நிறுவனத்தை மீறி தனியார் நிறுவனத்திடம் 40 முதல் 50 சதவிகிதம் லாபத்துக்கு மடிக்கணினியை வாங்கியிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் இது போல பல தவறுகள் நடந்து வருகின்றன.
தமிழகத்தில் எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க பா.ஜ.க தயார் நிலையிலிருக்கிறது. நகர்ப் புறத் தேர்தல் தொடர்பாக எங்கள் கட்சியின் மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். உள்ளாட்சித் தேர்தலை பா.ஜ.க பரிட்சை களமாகப் பார்க்கிறது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சியை, காரம், இனிப்பு, கசப்பு என இருப்பதாகச் சொன்னேன். ஆனால், இப்போது திமுக ஆட்சியை கட்டு, கமிஷன், கரப்ஷன் எனச் சொல்கிறேன். அ.தி.மு.க-வும், பாரதிய ஜனதாவும் கூட்டணியாக ஒரே கப்பலில் பயணம் செய்கிறது. கப்பல் நன்றாக நேராக போய்கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து முழுமையாகத் தெரிவதற்கு முன்பாக பள்ளிகளுக்கு சிறுகுழந்தைகள் செல்வதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒமைக்ரான் தாக்கம் தெரியாமல் பள்ளிகளை திறப்பது சரியா என ஆராய்வது நல்லது” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3INhiee
via
