நெல்லை மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் திசையன்விளை கிராமம் உள்ளது. விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் பெருமளவில் வசிக்கும் இந்த கிராமத்தைச் சுற்றிலும் நிறைய சிறிய கிராமங்கள் இருக்கின்றன. தேரிக்காடுகளைக் கொண்ட அந்தப் பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
திசையன்விளை அருகிலிருக்கும் எருமைக்குளம் பஞ்சாயத்து பகுதியில் புதிதாக மதுக்கடை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். அதனால் அந்தப் பகுதியிலிருக்கும் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக தங்கள் எதிர்ப்பை உள்ளூரில் பதிவு செய்தபோதிலும், மதுக்கடை அமைக்கும் பணி தொடர்ந்தது.
அதையடுத்து, மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், திசையன்விளை சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று திரண்டு வந்தார்கள். ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்கள், ``எங்களிடம் கருத்துக் கேட்காமல் மதுக்கடை திறக்க அதிகாரிகள் முயல்கிறார்கள். கூலி வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் வசிக்கும் எங்கள் பகுதியில் மதுக்கடை அமைந்தால் பொருளாதாரம் மிகவும் பின்தங்கிப் போய்விடும்
கோயில், தொழில்நுட்பக் கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, மருத்துமனை என மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பகுதியில் புதிய மதுக்கடை அமைவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எங்கள் எதிர்ப்பை அதிகாரிகளுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் மது குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்றார்கள்.
ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்ட பெண்கள் மது பாட்டில்களில் குளிர்பானம் நிரப்பி எடுத்து வந்திருந்தனர். அதனால், காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் வைத்திருந்த குளிர்பானம் அடைக்கப்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பின்னர் ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். ஆட்சியரைச் சந்தித்த பெண்கள், புதிய மதுபானக் கடை திறக்கக் கூடாது என வலியுறுத்தியதுடன், ஏற்கெனவே செயல்பட்டுவரும் இரு மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்ததால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pVYhOp
via
