கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில், "மீன் வித்திட்டா வர்றே, நாறுது.. இறங்கு இறங்கு" எனக்கூறி மீனவ மூதாட்டி செல்வமேரியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மூதாட்டி செல்வமேரி குளச்சல் பேருந்து நிலையத்தில் சக பயணிகளிடம் கண்ணீருடன் நியாயம் கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த செல்வமேரி தலைச்சுமட்டில் மீன் விற்பனை செய்வது வழக்கம். மீதமுள்ள மீன்களை பேருந்தில் சென்று குளச்சல், வடசேரி பகுதிகளில் விற்பனை செய்வது வாடிக்கை. இந்த நிலையில்தான் கடந்த திங்கள் கிழமை மீன்விற்றுக்கொண்டு வந்த மூதாட்டி செல்வ மேரியை பேருந்து நடத்துனர், 'மீனு வித்துட்டா வாற நாத்தமடிக்கும், பஸ்சுல வேற யாரும் போகவேண்டாமா' எனக்கேட்டு இறக்கி விட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேருந்து நிலையத்தில் நியாயம் கேட்டபோதும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் நியாயம் கேட்கும் செல்வம் மூதாட்டியின் வீடியோ வெளியானதும் மூதாட்டி செல்வ மேரியை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத குளச்சல் பேருந்து நிலைய சமய குறிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் மாவட்ட போக்குவரத்து துணை இயக்குநர் ஜெரோலின் அந்த மூதாட்டியிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின், 'இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாகவும் நடத்துனரின் செயல் கண்டிக்கத்தக்கது' எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மூதாட்டி செல்வமேரியை பேருந்தில் அவமானப்படுத்தியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் செல்வமேரி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வமேரி கூறுகையில், "கண்டக்டர் கருவாடு இருக்கிறதா சொன்னதால, நான் என் பையை திறந்து காண்பித்தேன். அதுக்க பிறவும் என்னை அவர் திட்டினார். உடனடியா நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. வருங்காலத்தில இதுமாதிரி பெண்களுக்கு நடக்கக்கூடாது, அதுக்கு நீங்க நடவடிக்கை எடுக்கணும். எங்களுக்கு நீங்க பாதுகாப்பு தரணும். கண்டக்டர் மேல நடவடிக்கை எடுத்ததா சொன்னாங்க. அவங்களை மன்னிச்சு விடணும். அவங்களுக்கு தண்டன கொடுத்தா அது அவக்க பிள்ளைங்களையும் பாதிக்கும். அந்த பிள்ளைகளும் கதறும். இனி மேல் அவங்க இப்படி செய்ய கூடாது" என்றார் தாயுள்ளத்துடன்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3Gk2KAO
via
