வருமானத்துக்கு 171% அதிகமாக சொத்துக்குவிப்பு; மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் விடிய விடிய ரெய்டு

0

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் கண்மணி. இவர் மத்திய அரசின் சிறந்த ஆய்வாளர் விருது பெற்றுள்ளார். இவர் கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார். நாகர்கோவில் பாலசுப்பிரமணிய வீதியில் கண்மணி வசிக்கும் வீட்டில் நேற்று அதிகாலை 6 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை சுமார் 20 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு கண்மணியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், அவர் உறவினரான வடிவீஸ்வரத்தைச் சேர்ந்த மணி, கண்மணியின் தோழி அமுதா ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது 88 சவரன் தங்க நகைகள், 7 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வங்கி வைப்புத் தொகை 88 லட்சம் ரூபாய், வங்கி முதலீடு 3 லட்ச ரூபாய் என மொத்தம் ஒரு கோடியே 13 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், வெற்று பாண்டில் கையெழுத்துபோட்ட பாண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வாளர் கண்மணி தனது வருமானத்திற்கு அதிகமாக 171.78 % சொத்து சேர்த்தது இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் இவ்வளவு பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது காவல்துறை அதிகாரிகள் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கண்மணி வீட்டில் சோதனை

நாகர்கோவிலில் கோட்டாறு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த கண்மணி, பின்னர் எஸ்.பி.சி.ஐ.டி எஸ்.ஐ ஆக பணிபுரிந்தார். 2018-2021 வரை எஸ்.பி இன்ஸ்பெக்டராக பணியில் இருந்தார். அதன் பிறகு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். எஸ்.பி இன்ஸ்பெக்டராக இருந்த சமயத்தில் அரசியல்வாதிகளுக்கும், மணல் கடத்தல் கும்பலுக்கும் ஆதரவாக இவர் பல போலீஸ் அதிகாரிகளை பழிவாங்கியதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல எஸ்.பி அலுவலகத்தில் கோலோச்சினார் கண்மணி. தன்னிச்சையாக பல பஞ்சாயத்துகளை நடத்தி முடித்து கல்லாக்கட்டியதால்தான் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து மாற்றப்பட்டார். கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்களை போலீஸ் கைது செய்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், போலீஸ் அதிகாரியான இவரே பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்திருக்கிறார்.

சோதனை நடந்த கண்மணியின் வீடு

வட்டிவாங்கியதில் பலர் பெரும் புள்ளிகள் என்கிறார்கள். போலீஸ் அதிகாரி என்பதால் வட்டி சரியான நேரத்துக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் வட்டி கொடுப்பதில் காலதாமதம் ஆனதால் இன்ஸ்பெக்டர் கண்மணி மிரட்டியிருக்கிறார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த நபர், கண்மணி குறித்த பல தகவல்களை ஆதாரத்துடன் விஜிலென்ஸுக்கு கொடுத்திருக்கிறார். வழக்கமாக வருமானத்துக்கு அதிகமாக 15 சதவிகிதம் சொத்து இருந்தால் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், இவர் 171 சதவிகிதம் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

Also Read: `இரண்டு ரகசிய லாக்கர்கள்... 10 வங்கிகளில் கணக்கு' - லஞ்ச ஒழிப்புத்துறை ரேடாரில் சிக்கிய ஆர்.டி.ஓ!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/ougIV20
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*