சிதம்பரம்: சாதி பெயரை சொல்லி மிரட்டல்?! - பெண் பக்தரை மிரட்டிய 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை வழக்கு

0

கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருக்கும் தில்லை நடராஜர் கோயில் உலக அளவில் புகழ் பெற்றது. விசேஷ நாட்களை தவிர்த்து சாதாரண நாட்களிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நடராஜரை தரிசித்து செல்வார்கள். சில நாட்களுக்கு முன்பு நடராஜர் கோயிலில் இருக்கும் தீட்சிதர்கள் இரு குழுவாக பிரிந்து மோதிக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம் நடராஜர் கோயில்!

அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு இருபதுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரை சூழ்ந்துகொண்டு மிரட்டிய வீடியோ காட்சியும் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தரிசிப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால் ஊரடங்கை அமல்படுத்திய அரசு, பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருச்சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபடுவது தடை செய்யப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது அரசு. அதனால் மீண்டும் திருச்சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பெண் பக்தர் ஜெயசீலா

அதையடுத்து கடந்த 10-ம் கோயில் வளாகத்தில் நடைப்பெற்ற பொது தீட்சிதர்கள் கூட்டத்தில் பக்தர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது தீட்சிதர்களில் ஒருதரப்பு திருச்சிற்றம்பல மேடையில் ஏறி வழிபடுவதற்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் மற்றொரு தரப்பு அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியதால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறியவர்களில் ஒருவரான சக்திகணேஷ், திருச்சற்றம்பல மேடையில் ஏறுவதற்காக சென்றார். அப்போது சக்திகணேஷ் தீட்சிதரை தடுத்து நிறுத்திய மற்றொரு தரப்பு தீட்சிதர்கள் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

ஜெயசீலாவை திருச்சிற்றம்பல மேடைக்கு அழைத்துச் சென்ற தர்ஷன் தீட்சிதர்

தொடர்ந்து சக்திகணேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசெல்வம் மற்றும் சபேசன் என இரு தீட்சிதர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர் சிதம்பரம் நகர காவல் நிலைய போலீஸார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயசீலா என்ற பெண் பக்தர் ஒருவர் கோயிலுக்கு சென்றார்.

அவரை திருச்சற்றம்பல மேடைக்கு அழைத்துச் சென்றார் சக்திகணேசனின் மகன் தர்ஷன் தீட்சிதர். அப்போது சுமார் 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அந்த பெண்ணை சுற்றி வளைத்து திருச்சிற்றம்பல மேடைக்கு போகக் கூடாது என்று தடுத்து நிறுத்தியதுடன், ”உன்னை தொலைத்துவிடுவேன்” என்று எச்சரித்தனர்.

அதேபோல ஜெயசீலாவின் கையை பிடித்து இழுத்த சில தீட்சிதர்கள் அவரை சாதி பெயர் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதையடுத்து ஜெயசீலா அளித்த புகாரின் அடிப்படையில் 20 தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது சிதம்பரம் நகர காவல் நிலையம்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/kvfFh2i
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*