`அதிகரிக்கப்படும் பசுமைப் பரப்பு; 4 லட்சம் மரக்கன்றுகள்!' - நாமக்கல் நிர்வாகத்தின் `பசுமை' முயற்சி

0

நாமக்கல் மாவட்டம் வறட்சிமிகுந்த மாவட்டமாக மாறியிருக்கிறது. கோழிகள் அதிகம் வளர்க்கப்படுவதால், இங்கு பூமி அதிகம் வெப்பமாவதாகவும் சொல்லப்படுகிறது. காடுகளின் அளவு குறைவாக இருப்பதால், இங்கு மழைப்பொழியும் குறைவாக உள்ளதாகச் சூழலியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கு கீழே போய்விட்டதாகச் சொல்கிறார்கள். இதனால், நாமக்கல் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரித்து, வருடம்தோறும் தொடர்ச்சியாகவும் இயற்கையாகவும் மழைபெறும் நிலையை உருவாக்க, `பசுமை நாமக்கல்' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பார்வையிடும் ஆட்சியர்

இதனடிப்படையில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரம் வளர்க்கும் ஆர்வலர்கள், அரசுத் துறைகள், மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், வங்கிகள், தனியார் தொண்டு அமைப்புகள் மூலமாகக் கோயில் நிலங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சாலைகள், பயன்பாடற்ற நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அவர்களை ஊக்குவிப்பதோடு, காடுகள் பரப்பை அதிகப்படுத்த பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியத்தில் உள்ள அரூர் ஊராட்சி, ஆண்டபுரம் ஊராட்சி, வளையப்பட்டி ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் வைத்து வளர்க்கப்பட்டு வரும் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங். நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பார்வையிடும் ஆட்சியர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், அரூர் ஊராட்சி ஈச்சங்கோவில்பட்டி கிராமத்தில் ரூ.1.89 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, நீரூற்றி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், ஈச்சங்கோவில்பட்டியில் ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீர் குட்டை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளதையும், மரக்கன்றுகள் மரங்களாக உருவாகத் தொடர்ந்து நீர் ஊற்றி வளர்ப்பதற்காக ரூ.12.25 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கிணறு தோண்டும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டார்.

அதோடு, காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அரூர் ஊராட்சி ஆலாம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.1.55 லட்சம் மதிப்பீட்டில் 560 எண்ணிக்கையிலான மூலிகைச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும், ஆலாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்வதற்காக ரூ.12,000 செலவில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு நீரூற்றி பராமரிக்கப்பட்டு வருவதையும், அரூர் ஊராட்சி சுக்காம்பட்டி வாரியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் வகையில் தொடர்ச்சியான இடைவெளியில் சிறுபள்ளங்கள் ஏற்படுத்தும் பணி ரூ.12.27 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பார்வையிட்டார்.

மரக்கன்று நடும் பணி

பின்னர், பேசிய மாவட்ட ஆட்சியர், ``நாமக்கல் மாவட்டத்தில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில், இதுவரை 4 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. மரக்கன்றுகள் நடுவதோடு இல்லாமல், அவற்றுக்குத் தொடர்ந்து நீரூற்றி பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் பரவலாகவும் சீராகவும் மழை கிடைக்க வாய்ப்புள்ளது. நாமக்கல் மாவட்டத்தைப் பசுமையான மாவட்டமாக மாற்றும் வரை இந்தப் பணி விடாது தொடரும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/t4WAjTS
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*