உள்ளாட்சி ரேஸ்: `தேர்தல் அரசியலில் கைதேர்ந்தவர்கள் மோதும் களம்!’ - கோவை மாநகர் யாருக்கு?

0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி தனி கவனம் ஈர்த்துள்ளது. கோவையை தங்களது கோட்டையாக தக்கவைக்க அ.தி.மு.க-வும், கடந்த கால தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க-வுக்கும் அனல்பறக்க மோதிக் கொண்டிருக்கின்றன.

வேலுமணி - செந்தில் பாலாஜி

Also Read: அதிமுக கோவை மேயர் ரேஸ்... `புறப்பட்ட புதிய புயல்’ - அப்செட்டில் எஸ்.பி வேலுமணி நிழல்?!

அ.தி.மு.க-வின் வெற்றியை தக்கவைக்க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியும், தி.மு.க-வை வெற்றி பெற வைக்க அமைச்சர் செந்தில் பாலாஜியும் வியூகங்களை வகுத்து வருகின்றனர். கோவை மாநகராட்சி தேர்தல் களத்துக்கு முன்பு, மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள பிரச்னைகளை தெரிந்து கொள்வோம்.

கோவையை பொறுத்தவரை அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணியின் சொந்த ஊர். அவர் கண் அசைவில்தான் கோவை மாநகராட்சி இயங்கி வந்தது. இதனால் ஏராளமான ஊழல் புகார்களும் வட்டமடித்தன. கடந்தாண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியபோது, அவருடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி

ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி பட்ஜெட்டின்போது நிதிப்பற்றாக்குறை எகிறிக் கொண்டே போகிறது. ஆட்சி மாறியவுடன் திட்டப்பணிகளுக்கு பணம் இல்லாமல், ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் ரத்து செய்யப்பட்டன.

தடுக்கி விழுந்தால் மேம்பாலம், ஸ்மார்ட் சிட்டி பணி, அடுத்து மெட்ரோ ரயில் திட்டம் வரை அடுக்கினாலும், கோவை மாநகராட்சியில் பல இடங்களில் சரியான சாலைகள் இல்லை. ரூ.3,167 கோடிக்கு கோவை குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் 2 வாரங்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது.

கோவை

போக்குவரத்தும் பாடாய் படுத்துகிறது. பல இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடியவில்லை. தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறுபவர்களுக்கு இந்தப் பிரச்னையை சரிசெய்யவே 2-3 ஆண்டுகளாகும்.

2016-ம் ஆண்டில் இருந்தே கோவை மாநகராட்சியை கைப்பற்ற அ.தி.மு.க வியூகங்களை வகுத்து வருகிறது. கோவையை பொறுத்தவரை தேர்தல் பணிகளில் எப்போதும் அ.தி.மு.கதான் வேகம் காட்டும். ஆனால், செந்தில் பாலாஜி வருகையால், தி.மு.கவும் இந்தமுறை களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அதேநேரத்தில் கடந்த காலங்களில் தி.மு.கவை வதைக்கும் உள்கட்சி பூசல் பஞ்சாயத்து இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

செந்தில் பாலாஜி

வேட்பாளர் தேர்வு, கூட்டணிகளுக்கு சீட் ஒதுக்கியது என்று அனைத்திலும் பஞ்சாயத்துதான். செந்தில் பாலாஜியின் கார், வீட்டை முற்றுகையிட்டும் உடன்பிறப்புகள் எதிர்ப்புகளை காட்டினர்.

வேட்பாளர் பட்டியலில் தி.மு.கவை போல, அ.தி.மு.க-விலும் பஞ்சாயத்து நிலவுகிறது. பல சீனியர்களுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. சீட் கேட்ட பலரிடம் லட்சத்தில் வெட்டுங்கள் என்று கூறவே பதறியுள்ளனராம் ரத்தத்தின் ரத்தங்கள். அதேநேரத்தில் புதிதாக வந்தவர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள செல்வந்தவர்களுக்கு வாரி வழங்கியுள்ளனர்.

அதிமுக கோவை மேயர் ரேஸ்

வேலுமணியின் நிழலாக வலம் வருபவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் மனைவி சர்மிளா தான் மேயர் வேட்பாளர் என்று கூறப்பட்டு வந்தது. கடைசி நேர ட்விஸ்டாக, கிருபாலினி என்பவரை டிக் செய்திருக்கிறதாம் அ.தி.மு.க. இதன் காரணமாக வேலுமணியின் ஆதிக்கத்துக்கு எதிராக, ஆங்காங்கே கலகக் குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.

பாஜக தனித்து களமிறங்குவது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜக கூட்டணியில் இல்லாததால், சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக அறுவடை செய்யும் என்றும், பல இடங்களில் அதிமுக - பாஜக `லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங்கில்’ செயல்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க-விலும் மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் விஷயத்தில் தாரளமாக விளையாடியுள்ளனர். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் சில இடங்களில் உடன்பிறப்புகள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

நிவேதா
மீனா லோகு

தி.மு.கவை பொறுத்தவரை சீனியர் அடிப்படையில் மீனாலோகு, மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் மனைவி லக்குமி இளஞ்செல்வி, புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி மகள் நிவேதா ஆகியோர் மேயர் ரேஸில் உள்ளனர்.

ஆனால் மேயர் விஷயத்தில் கட்சி தலைமையோ, செந்தில் பாலாஜியோ எந்த முடிவும் செய்யவில்லை. வெற்றி பெற்ற பிறகுதான் மேயர் விஷயத்தில் முடிவு செய்யப்படும். அதுவும் சர்ப்ரைஸாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

`களப்பணிகளை பொறுத்தவரை, தேர்தல் முடியும்வரை கட்சிக்காரர்கள் யாரும் தூங்கவேக் கூடாது’ என்று வேலுமணி சொல்லி வருகிறார்.

வேலுமணி

தி.மு.கவுக்கு இணையாக செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவே ஒரு பக்கம் சந்திரசேகர் மனைவி ஷர்மிளா மற்றொரு பக்கம் புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மனைவி கிருபாலினி என்று இருவரையும் இறக்கிவிட்டுள்ளார்.

“தேர்தலில் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தி.மு.க-வுக்கு இணையாக செலவு செய்ய வேண்டும் என்று வேலுமணி முடிவு செய்திருக்கிறாராம். தி.மு.க எவ்வளவு வைட்டமின்களை இறக்குகிறதோ, அதற்கு இணையாக அல்லது அவர்களுக்கு ஒருபடி மேல் சென்று வைட்டமின்களை கொடுப்போம். தி.மு.கவை எளிதில் வெற்றி பெறவிட மாட்டோம் .”என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.

கோவை

ஆனால் களத்தில் அ.தி.மு.க பெரிய அளவுக்கு உற்சாகம் தென்படவில்லை. ஒரு சில இடங்களில் வேட்பாளர்களுக்கு தலைமையிடம் இருந்து ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பு பரப்புரைக்கு செல்பவர்களுக்கு, அ.தி.மு.கவில் ரூ.500 பேட்டா, உணவு, மது வகைகள் எல்லாம் கொடுப்பார்கள். இந்தமுறை பல இடங்களில் ரூ.100-300 தான் கொடுக்கின்றனராம்.

அப்படியே தி.மு.க பக்கம் வந்தால் செலவு செய்வதற்காகவும், தேர்தல் களப்பணிக்காகவும் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

செந்தில் பாலாஜி

தினசரி செலவுக்காக அந்தந்த வார்டு பொறுப்பாளர்களிடம் ரூ.25,000 வரை கொடுக்கப்படுகிறதாம். பரப்புரைக்கு வருபவர்களுக்கே தினசரி ரூ.500 வரை கொடுக்கின்றனர். ஓட்டுக்கு வைட்டமின் `ப’, பரிசு பொருள்களை கொடுக்கவும் தி.மு.க திட்டமிட்டுள்ளதாம்.

வேலுமணி, செந்தில் பாலாஜி இருவருமே தேர்தல் அரசியலில் கைத்தேர்ந்தவர்கள் தான். கோவை அரசியல் செந்தில் பாலாஜிக்கு புதிது என்பது ஒரு மைனஸ். அதேநேரத்தில் ஆளுங்கட்சியாக இருப்பது தி.மு.கவுக்கு பிளஸ். கோவை மக்களின் எண்ண ஓட்டங்களை விரல் நுணியில் வைத்திருப்பது அ.தி.மு.கவுக்கு பிளஸ்.

கோவை

தற்போதைய சூழல் வைட்டமின் `ப’ விஷயத்தில் அ.தி.மு.கவை விட தி.மு.க கை சற்றே ஓங்குவது அ.தி.மு.க-வுக்கு மைனஸ். கட்சிகளில் நிலவும் உள்கட்சி பூசல்கள் இருவருக்குமே மைனஸ். இப்படி எல்லாவற்றிலும் சம பலமாக இருப்பதால், கோவை மாநகராட்சியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/g8TVQDz
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*