`வைட்டமின்கள்’ கொட்டிய பேரூராட்சி; சம பலத்தில் திமுக, அதிமுக! - குற்றாலம் யாருக்கு?!

0

தென்னகத்தின் ஸ்பா என வர்ணிக்கப்படுவது, தென்காசி மாவட்டம் குற்றாலம். இங்குள்ள அருவிகளில் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை குளிர்ந்த சாரலுடன் அருவிகளில் கொட்டும் தண்ணீரில் குளிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவிகளை உள்ளடக்கிய இந்த பேரூராட்சியில் மொத்தம் 8-வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் போட்டியிட பலர் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தவர்கள் கடைசி நேரத்தில் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டதால் மொத்தம் 17 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர்.

ஒவ்வொரு வார்டிலும் குறைந்த வாக்காளர்களே இருக்கும் நிலையில் வாக்காளர்களைக் கவரும் வகையில், போட்டியிட்ட வேட்பாளர்கள் வைட்டமின் `ப’ மற்றும் பரிசுப் பொருள்களை அள்ளிக் கொட்டினார்களாம்.

வாக்காளர்கள்

குற்றாலம் பேரூராட்சி சுற்றுலா மையம் என்பதால் வளர்ச்சிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படும் என்பதால் பணம் புரளும் இந்த பேரூராட்சியில் வெற்றிக்காக வேட்பாளர்கள் அதீத ஆர்வம் காட்டினார்கள். அதனால் சில வார்டுகளில் கூடுதல் வைட்டமின்களாக வெள்ளிக் குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுப்பொருள்களும் கொடுக்கப்பட்டன. வெற்றி பெற்றதும் தங்கக் காசு கொடுப்பதாகவும் சில வேட்பாளர்கள் உறுதியளித்திருந்தனராம்.

பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க-வும் அ.தி.மு க-வும் நேரடியாக மோதிய இந்த பேரூராட்சியில், இரு கட்சிகளுக்கும் தலா 4 வார்டுகள் கிடைத்துள்ளன. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சமபலத்துடன் இருப்பதால் பேரூராட்சியைக் கைப்பற்றப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, பெரும்பான்மையைக் கைப்பற்றுவதற்காக மீண்டும் இரு கட்சியினரும் குதிரை பேரத்தில் ஈடுபடப் போவதாக தகவல்கள் உலாவுகின்றன. குற்றாலம் பேரூராட்சியில் ஜெயித்த வார்டு உறுப்பினர்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க இரு தரப்பினரும் தயாராக இருப்பதால் மீண்டும் குற்றாலத்தில் பணம் அருவியாகக் கொட்டும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/F3tQX0d
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*