``சாதாரண பிரச்னையை மதரீதியாக மாற்றுகிறார்கள்!” -ஹிஜாப் விவகாரத்தில் கொதிக்கும் புதுச்சேரி அதிமுக

0

புதுச்சேரி அதிமுக தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், ``பல்வேறு தரப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் ஆதாயத்திற்காக மதக்கலவரத்தைத் தூண்டும் முயற்சியில் இறங்கியுள்ள தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை புதுச்சேரி அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. பள்ளியில் சீருடை அணிவது தொடர்பான ஆசிரியரின் சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் மாணவ, மாணவியர்களிடம் பிரிவினையை உருவாக்கும் முயற்சியை திமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் இறங்கியிருப்பது கேவலமான ஒரு செயலாகும். ஒரு மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டுவதில் அரசு, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், காவல் துறையினர், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு உண்டு.

அ.தி.மு.க கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்

சமுதாயத்தில் அவ்வப்பொழுது ஒருசிலரால் சிறு தவறுகள் ஏற்பட்டாலும், அதை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, மாநில நலனை கருத்தில் கொள்ளாமல் சம்பந்தப்பட்ட மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் வாய்க்கு வந்தபடி பொய்யை பேசுவது, பொறுப்புள்ள அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. அரியாங்குப்பம் பள்ளியில் பர்தா தொடர்பான ஒரு சாதாரணமான ஒரு பிரச்னையை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கையிலெடுத்து அதற்காக முதல்வரை சந்தித்து, மனு கொடுப்பது மதரீதியான குழப்பத்தை ஏற்படுத்தும் செயலாகும். அதேபோன்று மத்திய அரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவரும், புதுச்சேரி மாநிலத்தில் ஐந்தாண்டு காலம் முதல்வராக இருந்தவருமான நாராயணசாமி, இந்த ஒரு சாதாரணமான பிரச்னையை பூதாகாரமான மதப்பிரச்னையாக ஆக்குவதற்காக, புதுச்சேரி மாநிலத்தில் மதவாத சக்திகள் தலைதூக்கி உள்ளதாக பொறுப்பற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி வருகிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களின் அரசை குறை கூற முடியாத சூழ்நிலையில் வேண்டுமென்றே ஆட்சியில் குழப்பம் ஏற்படுத்த கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கோரிக்கை வைக்கிறார். பள்ளி மாணவி பர்தா விஷயத்தில் கல்வி அமைச்சரை மாற்றவேண்டும் என நாராயணசாமி கேட்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.

புதுச்சேரி அரசு

ஆசிரியர் பள்ளி வகுப்பறையில் பர்தா அணிந்து வரக்கூடாது என்று கூறியிருந்தாலும், அவருக்கு என்ன உடனடியாக தூக்கு தண்டனையா கொடுக்க முடியும் ? அவர் கூறியது பள்ளியின் நடத்தை விதிகளுக்கு உட்பட்டதா இல்லையா என்பதை விசாரித்து அதில் ஏதாவது உள் நோக்கம் இருந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது சரியான ஒன்றாகும்.

ஆனால் அதுவரை கூட அமைதி காக்க முடியாத தி.மு.கவும், காங்கிரஸும் கேவலம் அரசியல் ஆதாயத்திற்காக ஊதி பெரிதாக்குவது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். தங்களது அரசியல் சுயநலத்திற்காக மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற சுய நலமிக்க அரசியல் கட்சி தலைவர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மதத்திலும் உள்ள மத நம்பிக்கைக் கொண்டவர்கள் சீர்தூக்கி பார்த்து இவர்களது அற்ப செயல்களை புறந்தள்ள வேண்டும்.

அமைதி தவழும் புதுச்சேரி மாநிலத்தில் திட்டமிட்டு மத கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறையின் உயரதிகாரிகள் எடுத்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக ஆட்சியமைத்தவுடன் நியமன எம்.எல்.ஏ, ராஜ்யசபா, வாரியத்தலைவர் பதவிகளை தர வேண்டுமென்று அதிமுக தரப்பில் கோரினோம். ஆனால் நியமன எம்.எல்.ஏ, ராஜ்யசபா பதவிகளை அவர்களே எடுத்துக்கொண்டனர். ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக இருந்தோம் என்பதால் எங்களுக்கும் உரிமை இருக்கிறது.. அதற்காக தற்போது மீதமுள்ள வாரியத்தலைவர் பதவிக்காக யாரிடமும் கையேந்தும் அவசியம் அதிமுகவுக்கு இல்லை” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/1XalQuk
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*